நாடாளுமன்ற வளாகத்தில் காங். மூத்த தலைவர்கள் அவசர ஆலோசனை..!

தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-24 06:18 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கியது.

இந்த இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கியதில் இருந்தே உறுப்பினர்கள் அமளியல் தொடர்ந்து அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டு வருகிறது. ராகுல் காந்தி பேச்சு, அதானி விவகாரம் ஆகிய பிரச்சினைகளை எழுப்பி இரு தரப்பும் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை தொடர்ந்து முடங்கி வருகிறது.

இந்த நிலையில், இன்றும் பாஜக, எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் 9-ம் நாளாக முடங்கியுள்ளது. ராகுல் காந்தி பேச்சு, அதானி விவகாரத்தால் மக்களவை மதியம் 12 மணி வரையும், மாநிலங்களவை மதியம் 2.30 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் காங். மூத்த தலைவர்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் காங். மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம், அதானி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்