சுதந்திர தின பவள விழாவையொட்டி பெங்களூருவில் காங்கிரசார் பிரமாண்ட ஊர்வலம்

சுதந்திர தின பவள விழாவையொட்டி பெங்களூருவில் காங்கிரசார் பிரமாண்ட ஊர்வலம் நடத்தினார்கள். இதில், லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2022-08-15 21:23 GMT

பெங்களூரு: சுதந்திர தின பவள விழாவையொட்டி பெங்களூருவில் காங்கிரசார் பிரமாண்ட ஊர்வலம் நடத்தினார்கள். இதில், லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சி ஊர்வலம்

நாடு முழுவதும் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தின பவள விழாவையொட்டி வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பிலும் சுதந்திர தின பவள விழா கோலாகலமாக கொண்டாடப்படும் என்றும், பெங்களூருவில் பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவித்திருந்தார்.

அதன்படி, சுதந்திர தின பவள விழாவையொட்டி பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் பிரமாண்ட ஊர்வலம் நடத்தினார்கள். பெங்களூரு சுதந்திர பூங்காவில் இருந்து பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரி மைதானம் வரை சுதந்திர தின விழா ஊர்வலம் நடைபெற்றது. இதற்காக சிட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள சங்கொள்ளி ராயண்ணா சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினாா்கள்.

லட்சக்கணக்கான தொண்டர்கள்

அதன்பிறகு, கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சுர்ஜேவாலா, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் மற்றும் தலைவர்கள் பசவனகுடி நேஷனல் மைதானத்திற்கு ஊர்வலமாக புறப்பட்டு சென்றார்கள். இந்த ஊர்வலத்தில் பெங்களூரு மட்டும் இன்றி மாநிலத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டனர். லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டா்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு இருந்தனர். சிட்டி ரெயில் நிலையம், அனந்தராவ் சர்க்கிள், சுதந்திர பூங்கா, டவுன்ஹால், மினர்வா சர்க்கிள், வி.வி.புரம் வழியாக பசவனகுடி மைதானத்திற்கு ஊர்வலம் நேற்று மாலையில் சென்றடைந்தது.

ஊர்வலத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கையில் தேசிய கொடியை ஏந்தியபடி சென்றார்கள். பின்னர் பசவனகுடி நேஷனல் கல்லூரி மைதானத்தில் நடந்த கூட்டத்தில் சுர்ஜேவாலா, டி.கே.சிவக்குமார், சித்தராமையா உள்ளிட்ட தலைவா்கள் பேசினார்கள். ஊர்வலம் சென்ற சாலைகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிளக்ஸ், பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.

போக்குவரத்து நெரிசல்

காங்கிரசாரின் பிரமாண்ட ஊர்வலத்தால் பெங்களூரு நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

கூட்டம் முடிந்ததும் காங்கிஸ் தொண்டர்கள் செல்வதற்காக மெட்ரோ ரெயில்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து, மெட்ரோ ரெயில்களில் பசவனகுடியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தொண்டர்கள் புறப்பட்டு சென்றார்கள். கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த பிரமாண்ட ஊர்வலத்திற்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்