காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி பா.ஜ.க.வில் இணைந்தார்
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது, சுரேஷ் பச்சோரி பாதுகாப்பு துறையின் இணை மந்திரியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போபால்,
மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மத்தியபிரதேசத்தில் காங்கிரசுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுரேஷ் பச்சோரி இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். மத்தியப் பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ், மாநில பா.ஜ.க. தலைவர் வி.டி. சர்மா, முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் முன்னிலையில் சுரேஷ் பச்சோரி பா.ஜ.க.வில் இணைந்தார்.
காந்தி குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் பச்சோரி. காங்கிரஸ் கட்சியில் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் குழுவில் உள்ள ஒரு நபராக இருந்தவர். மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தபோது சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். அம்மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பாதுகாப்பு துறையின் இணை மந்திரியாக இருந்துள்ளார். மேலும், இவர் 4 முறை மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடன் முன்னாள் எம்.பி. கஜேந்திர சிங் ராஜுகெதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் (சஞ்சய் சுக்லா, அர்ஜுன் பாலியா, விஷல் பட்டேல்) மற்றும் பலர் இன்று பா.ஜ.க.வில் இணைந்தனர். முன்னாள் எம்.பி. ராஜுகெதி பழங்குடியினத்தின் முக்கிய தலைவர் ஆவார். இவர் தார் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் 1998, 1999 மற்றும் 2009-ல் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர். இவர் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்னதாக 1990-ல் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.