மராட்டியத்துக்கு புதிய கவர்னரை நியமிக்க வேண்டும்; காங்கிரஸ் வலியுறுத்தல்

பகத்சிங்கோஷ்யாரியை வெளியேற்றிவிட்டு மராட்டியத்துக்கு புதிய கவர்னரை நியமிக்க வேண்டும் என முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான் வலியுறுத்தி உள்ளார்.;

Update:2022-11-22 18:59 IST

மும்பை,

கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி சமீபத்தில் சத்ரபதி சிவாஜி பற்றி பேசியது மராட்டியத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பகத்சிங் கோஷ்யாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இதேபோல நேற்றும் பகத்சிங்கோஷ்யாரியை கண்டித்து அரசியல் கட்சிகள் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். நான்தெட்டில் முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பகத்சிங் கோஷ்யாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய கவர்னர் நியமனம்

போராட்டத்தின் போது, பகத்சிங்கோஷ்யாரியை மாநிலத்தைவிட்டு வெளியேற்றிவிட்டு மராட்டியத்துக்கு புதிய கவர்னர் நியமிக்க வேண்டும் என அசோக் சவான் கூறினார்.

இதுதொடர்பாக அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:- கவர்னரின் பேச்சு பொது மக்களின் கோபத்தை அதிகப்படுத்தி உள்ளது. இதுஒரு தனிப்பட்ட கட்சி சார்ந்தது அல்ல, நாட்டின் பெருமை பற்றியது. கவர்னர் இதுபோன்ற சர்ச்சைகுரிய கருத்துகளை கூறுவது இது முதல் முறையல்ல. கவர்னர் இதுபோன்ற கருத்துகளை கூறுவது சரியானது அல்ல. பகத்சிங்கோஷ்யாரி கண்டிப்பாக மராட்டியத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். மாநிலத்துக்கு புதிய கவர்னரை நியமிக்க வேண்டும். மராட்டியம் அவமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்