67 கோடி பேரின் தகவல்கள் திருட்டு பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை
67 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.;
புதுடெல்லி,
24 மாநிலங்கள் மற்றும் 8 பெருநகரங்களை சேர்ந்த மொத்தம் 67 கோடி தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் தனிப்பட்ட தகவல்களை திருடி விற்றதாக வினய் பரத்வாஜ் என்பவரை சைபராபாத் போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
அவர் ஜி.எஸ்.டி., பல்வேறு மாநிலங்களின் சாலை போக்குவரத்து நிறுவனங்கள், ஆன்லைன் வணிக தளங்கள், சமூக வலைத்தளங்கள், நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றின் வாடிக்கையாளர்களது தகவல்களை திருடி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நீட் மாணவர்கள், கல்வி நிறுவன மாணவர்கள், பாதுகாப்புத்துறை ஊழியர்கள், அரசு ஊழியர்கள், பான் கார்டு வைத்திருப்பவர்கள், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வாடிக்கையாளர்கள் ஆகியோரின் தனிப்பட்ட தகவல்களை திருடி விற்றிருப்பது தெரிய வந்தது.
தனியுரிமை மீது தாக்குதல்
இந்நிலையில், இந்த பத்திரிகை செய்தியை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு நேற்று கேள்வி எழுப்பியது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
67 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் எதற்காக திருடப்பட்டது? எப்படி திருடப்பட்டது? ராணுவத்தின் தகவல்களை திருடியது யார்? எப்படி திருடினார்கள்?
இது, தனியுரிமை மற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு மீதான தாக்குதல். இதை ஏற்க முடியாது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.