வெளிநாட்டு சட்டை அணிந்துகொண்டு இந்தியாவை இணைக்க யாத்திரையா?" ராகுல் மீது அமித்ஷா கடும் பாய்ச்சல்
வெளிநாட்டு சட்டை அணிந்து கொண்டு, இந்தியாவை இணைக்க யாத்திரை மேற்கொள்கிறேன் என்பதா என கேட்டு ராகுலை அமித்ஷா தாக்கினார்.;
ராகுலுக்கு நினைவூட்டல்
மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷா, ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தலைநகர் ஜெய்ப்பூரில் அவர் பா.ஜ.க. பூத் நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை சாடினார். அவர் கூறியதாவது:- நாடாளுமன்றத்தில் ராகுல் பேசியதை அவருக்கும், பிற காங்கிரஸ் எம்.பி.க்களுக்கும் நினைவூட்ட விரும்புகிறேன். இந்தியா ஒரு நாடே இல்லை என்று ராகுல் பேசினார். ராகுல், எந்த புத்தகத்தில் இதை நீங்கள் படித்தீர்கள்? இது ஒரு நாடு, இந்த நாட்டுக்காக லட்சோப லட்சம் பேர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.
இந்தியா நாடே இல்லை என்றவர்...
இந்தியா ஒரு நாடே இல்லை என்று சொல்லியவர், இப்போது வெளிநாட்டு சட்டை அணிந்து கொண்டு இந்தியாவை இணைக்க யாத்திரை நடத்துகிறார்.
ராகுல் இந்தியாவை இணைப்பது இருக்கட்டும், முதலில் அவர் வரலாற்றை படிக்கட்டும். காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்காக உழைக்க முடியாது. அது தாஜா செய்வதற்கும், ஓட்டு வங்கி அரசியலுக்கும்தான் உழைக்க முடியும். ராஜஸ்தானிலும், சத்தீஷ்காரிலும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறபோது, காங்கிரஸ் ஒன்றுமில்லாமல் போய் விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்மிரிதியும் சாடல்
கர்நாடக மாநிலம், தொட்டபல்லாபூரில் நடந்த கூட்டத்தில் பேசிய மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியும் ராகுல் காந்தியை சாடினார்.
அப்போது அவர், "நான் (சோனியா) காந்தி குடும்பத்துக்கு சொல்கிறேன். ஆட்சி வரும், போகும். இந்திரா காந்திகூட ஆட்சியை இழந்திருக்கிறார். ஆனால் அவர் ஒருபோதும் நாட்டுக்கு எதிராக போர் தொடுப்பதாக கூறவில்லை. ஆனால் உங்கள் மகன் இந்தியாவுக்கு எதிராக போர் தொடுப்பதாக கூறி இருக்கிறார். ராகுல் நன்றாக கவனியுங்கள். ஒவ்வொரு இந்தியனின் கடைசி சுவாசம் இருக்கும் வரையில் இந்தியா உடையாது. இந்தியாவுக்கு எதிராக நீங்கள் தொடுத்துள்ள வேளையில், நாங்கள் ஒன்று சேர்ந்து உங்களை ஒன்றுமில்லாமல் செய்து விடுவோம்" என சாடினார்.
இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது ராகுல் காந்தி முன்தினம் அளித்த பேட்டியின்போது, "நான் கூறியபடி, நாட்டின் அனைத்து நிறுவனங்களின் கட்டுப்பாட்டையும் பா.ஜ.க. எடுத்துக்கொண்டுள்ளது. அவற்றில் தங்கள் ஆட்களில் பெரும்பாலோரை அவர்கள் புகுத்தி உள்ளனர். அவர்கள் அந்த அரசமைப்புகளை நிர்ப்பந்திக்கிறார்கள். சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றின் பங்களிப்பை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் எப்படி இவற்றுடன் நடந்து கொள்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். எனவே நாங்கள் ஒரு அரசியல் கட்சிக்கு எதிராக போரிடவில்லை. தற்போது போர் இந்திய நாட்டின் கட்டமைப்புக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையேதான்" என குறிப்பிட்டார். அதைத்தான் ஸ்மிரிதி இரானி சாடி உள்ளார்.