மோர்பி பாலம் விபத்து: பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் இழப்பீடு போதுமானதாக இல்லை - குஜராத் ஐகோர்ட்டு

மோர்பி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் வழங்கப்படும் இழப்பீடு மிகவும் குறைவு என்று குஜராத் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.;

Update:2022-11-24 22:05 IST

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்த வழக்கில் மாநில அரசுக்கு குஜராத் ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

மோர்பியில் கடந்த மாதம் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 130 பேர் உயிரிழந்தனர்.கம்பி அறுந்து விழுந்ததால் தான் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்துக்கு பாலம் பராமரிப்பு நிறுவனமே காரணம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு போதுமானதாக இல்லை என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்படும் வகையில் அமைப்பை உருவாக்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டது.இறந்தவர்களின் குடும்பத்தினரின் தகவல்களையும் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று கோர்ட்டு கூறியுள்ளது. விபத்துக்குப் பிறகு அனாதை ஆனவர்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் இழப்பீடு போதுமானதாக இல்லை என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.

பலத்த காயமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடும் சொற்பமே என்று கூறியுள்ளது. குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.இதனையடுத்து விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்து இழப்பீடு வழங்குவதற்கான கொள்கையை வகுக்கும்படி அரசுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும், அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்யுமாறு மாநில அரசுக்கு குஜராத் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அனைத்து பாலங்களும் சரியான நிலையில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்