வருகிற 6-ந்தேதி சிக்கமகளூருவில் 14 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு நடக்கிறது

சிக்கமகளூருவில் வருகிற 6-ந்தேதி 14 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு நடக்க உள்ளதாக மாவட்ட துணை கலெக்டர் ரூபா அறிவித்துள்ளார்.

Update: 2022-11-03 19:00 GMT

சிக்கமகளூரு;


ஆசிரியர் தகுதி தேர்வு

சிக்கமகளூரு மாவட்ட துணை கலெக்டர் ரூபா தனது அலுவலகத்தில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- வருகிற 6-ந்தேதி சிக்கமகளூருவில் உள்ள அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் 14 மையங்களில் 2 சுற்றுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு நடக்கிறது.

இந்த தேர்வை மொத்தம் 4,066 பேர் எழுத உள்ளனர். இதில் முதல் சுற்று காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நடக்கும். இந்த தேர்வை 6 மையங்களில் 1,719 பேர் எழுதுகின்றனர். பின்னர் இரண்டாம் சுற்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு முடியும். இதில் 8 மையங்களில் 2,347 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

144 தடை உத்தரவு

தேர்வு நடக்கும் மையங்களின் சுற்றுவட்டாரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. மேலும் தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்.

பின்னர் அவர்களிடம் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஏதேனும் ஆவணங்கள் உள்ளனவா என்பது குறித்து சோதனை நடத்தப்படும். தேர்வு மையத்தில் இருந்த 200 மீட்டர் சுற்றளவு பகுதிகளில் யாரும் நடமாடகூடாது.

கழிவறை வசதி

மேலும் தேர்வு மையங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், தேர்வு மையத்தை தூய்மையாக வைக்கும் படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக இன்று முதல் அதிகாரிகள் அனைவரும் தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்