தமிழ்நாட்டின் மூத்த வக்கீல் கே.வி.விஸ்வநாதன் உள்பட சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகள் 'கொலீஜியம்' பரிந்துரை

தமிழ்நாட்டின் மூத்த வக்கீல் கே.வி.விஸ்வநாதன் உள்பட 2 பேரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க ‘கொலீஜியம்’ பரிந்துரை செய்துள்ளது.

Update: 2023-05-16 20:45 GMT

புதுடெல்லி, 

நமது நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் மொத்த நீதிபதி பணியிடங்கள் 34 ஆகும். கடந்த 2 நாளில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரியும், எம்.ஆர்.ஷாவும் ஓய்வுபெற்றனர்.

இதனால் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, சஞ்சீவ் கன்னா ஆகியோரைக் கொண்ட 'கொலீஜியம்' (நீதிபதிகள் நியமனங்களுக்கான மூத்த நீதிபதிகள் குழு) நேற்று கூடியது.

இந்தக் கூட்டத்தில் ஆந்திர ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஷ்ராவையும், மூத்த வக்கீல் கே.வி.விஸ்வநாதனையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்வது என ஒருமனதாக முடிவு செய்து பரிந்துரைக்கப்பட்டது.

இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், ஜே.பி.பர்திவாலா 2030 ஆகஸ்டு 11-ந் தேதி ஓய்வு பெறுகிறபோது, கே.வி.விஸ்வநாதன், தலைமை நீதிபதியாகி, 2031 மே 25-ந் தேதி வரை அந்தப் பொறுப்பில் இருப்பார்.

சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதி ஆக நியமிக்கப்பட உள்ள ஆந்திர ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஷ்ரா, சத்தீஷ்கார் மாநிலம், ராய்க்காரில் 1964-ம் ஆண்டு, ஆகஸ்டு 29-ந் தேதி பிறந்தவர்.

ஆந்திர ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆவதற்கு முன்பு சத்தீஷ்காரில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், நீதிபதியாகவும் பணியாற்றி இருக்கிறார்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட உள்ள மூத்த வக்கீல் கே.வி.விஸ்வநாதன், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 1966-ம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி பிறந்தவர். கோவை சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்டப்படிப்பு படித்தவர். 1988-ல் தமிழ்நாடு பார்கவுன்சிலில் வக்கீலாகப் பதிவு செய்து கொண்டார். சுப்ரீம் கோர்ட்டில் 20 ஆண்டு காலம் வக்கீலாகப் பணியாற்றிய பின்னர் மூத்த வக்கீல் அந்தஸ்து பெற்றார்.

இவர் அரசியல் சட்டம், கிரிமினல் சட்டம், வணிக சட்டம், திவால் சட்டம், மத்தியஸ்தம் ஆகியன தொடர்பான வழக்குகளில் ஆஜரானவர். இவரை அங்கீகரிக்கும் வகையில் பல்வேறு வழக்குகளில் சுப்ரீம்கோர்ட்டுக்கு உதவும் வக்கீலாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2030-ம் ஆண்டு, ஆகஸ்டு 12-ந் தேதி தலைமை நீதிபதி ஆகிற வாய்ப்பு உள்ளது. அப்போது, பதஞ்சலி சாஸ்திரி, பி.சதாசிவம் ஆகியோரைத் தொடர்ந்து தலைமை நீதிபதி பதவி வகிக்கப்போகிற 3-வது தமிழர் என்ற பெருமையைப் பெறுவார்.

ஜூலை மாதம் 2-ம் வாரத்துக்குள் சுப்ரீம் கோர்ட்டின் மேலும் 4 நீதிபதிகள் ஓய்வு பெற உள்ளனர்.

அவர்களில் நீதிபதி கே.எம்.ஜோசப் அடுத்த மாதம் 16-ந் தேதியும், அஜஸ் ரஸ்தோகி 17-ந் தேதியும், தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன் 29-ந் தேதியும், கிருஷ்ண முராரி ஜூலை மாதம் 8-ந் தேதியும் ஓய்வு பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்