கிராம தங்கல் திட்டத்தில் பங்கேற்ற கலெக்டர் கோபாலகிருஷ்ணா

அக்ரஹாரா பாசள்ளி கிராமத்தில் கிராம தங்கல் திட்டத்தில் பங்கேற்ற கலெக்டர் கோபாலகிருஷ்ணா நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Update: 2022-12-17 20:47 GMT

மண்டியா:-

கிராம தங்கல் திட்டம்

மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா அக்ரஹாரா பாசள்ளி கிராமத்தில் நேற்று 'கலெக்டரின் கிராம தங்கல்' திட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் கோபாலகிருஷ்ணாவுடன் பல்வேறு அரசு துறைகளின் அதிகரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு கலெக்டரிடம் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து மனுவும் கொடுத்தனர்.

அதில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டியவற்றை அதிகாரிகள் செய்து கொடுத்தனர். பின்னர் ஏராளமானோருக்கு கலெக்டர் கோபாலகிருஷ்ணா நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் கூட்டத்தில் கலெக்டர் கோபாலகிருஷ்ணா பேசும்போது கூறியதாவது:-

முதியோர் உதவித்தொகை

30 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகள், பட்டா-சிட்டா, அடங்கல் ஆகியவற்றுக்கான ஆவணங்கள் உள்பட ஏராளமான நலத்திட்ட உதவிகள் இங்கு உடனடியாக செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. கிராமத்தில் பஸ் வசதி, சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் கோரி கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பி.பி.எல். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கான ஆரோக்கிய காப்பீடு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.

இதுவரை இப்பகுதியைச் சேர்ந்த 600 பேர் மட்டுமே ஆரோக்கிய காப்பீடு திட்டத்தின் கீழ் தங்களது பெயரை பதிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளன. விரைவில் பி.பி.எல். ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ஆரோக்கிய காப்பீடு கார்டு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்