கர்நாடக சட்டசபை வளாகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் போராட்டம்

முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-07-23 07:53 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் மகரிஷி வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் ரூ.187.3 கோடி ஊழல் தொடர்பாக மாநில சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே இந்த மோசடி வழக்கில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பெயரை வாக்குமூலத்தில் அளிக்குமாறு மாநில சமூக நலத்துறை உதவி இயக்குநரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாக அவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை தொடர்ந்து 2 அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து ஊழல் வழக்கில் முதல்-மந்திரி சித்தராமையாவை சிக்க வைக்க வேண்டும் என அமலாக்கத்துறை செயல்படுகிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இந்நிலையில், கர்நாடக சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அமலாக்கத்துறைக்கு எதிராக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதுகுறித்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

"சமூக நலத்துறை உதவி இயக்குநரை ஊழல் விவகாரத்தில் முதல்-மந்திரிக்கு சம்பந்தம் இருப்பதாக கூறச் சொல்லி வற்புறுத்திய அமலாக்கத்துறைக்கு எதிராக இன்று மந்திரிகள் உள்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் போராட்டம் நடத்தி வருகிறோம். சமூக நலத்துறை ஊழல் வழக்கை பொறுத்தவரை சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணைக்கு ஒத்துழைப்பதற்காக மந்திரியே ராஜினாமா செய்தார். மேலும், சிறப்பு விசாரணைக் குழு ஏற்கனவே 50 சதவீதம் தொகையை மீட்டுள்ளதுடன், நிறைய பேரை கைது செய்துள்ளது.

இப்போது அமலாக்கத்துறை விசாரணையில் ஈடுபட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள், சமூக நலத்துறை உதவி இயக்குநரை வற்புறுத்தி, இந்த வழக்கில் முதல்-மந்திரியை சம்மந்தப்பட்டுள்ளார் எனக் கூறவைக்க முயன்றுவருகிறது. அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளால் நான் குறிவைக்கப்பட்டேன். என்னைப் போன்றவர்களை சிபிஐ துன்புறுத்துகிறது. என் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டம் தன் கடமையை செய்யட்டும். விசாரணையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் தொடர்பாக சட்டசபையில் விவாதிப்போம்." இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்