நம்பிக்கை வாக்கெடுப்பு - நயப் சிங் சைனி அரசு வெற்றி
அரியானாவில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நயப் சிங் சைனி அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.;
சண்டிகார்,
அரியானாவில் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வந்தது. எனினும், கூட்டணியில் அங்கம் வகித்த ஜனநாயக ஜனதா கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
ஜனநாயக ஜனதா கட்சியின் சார்பில் துணை முதல்-மந்திரியாக உள்ள துஷ்யந்த் சவுதாலாவுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தொகுதி பகிர்வில் உடன்பாடு ஏற்படாத சூழலில், இந்த மோதல் முற்றியது.
பா.ஜ.க.வுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி முறித்து கொள்ள உள்ளது என வெளியான தகவலை அடுத்து அரியானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை முன்னிட்டு, தருண் சக் மற்றும் அர்ஜுன் முண்டா உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அரியானாவுக்கு விரைந்தனர்.
இந்த சூழலில், அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் பதவி விலகினார். அவர் தன்னுடைய மந்திரி சபையை சேர்ந்த சகாக்களுடன் சென்று கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் அதற்கான கடிதம் ஒன்றை வழங்கினார். உடனடியாக அவரது மந்திரிகள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதனால், அமைச்சரவை கலைக்கப்பட்டது.
இந்த சூழலில், அரியானாவின் புதிய முதல்-மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்த நயப் சிங் சைனி நேற்று பதவியேற்று கொண்டார். அவருக்கு ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா, பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில் அரியானா சட்டசபையில் இன்று நடந்த சிறப்பு கூட்டத்தில் முதல்-மந்திரி நயப் சிங் சைனி தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதன் மீது விவாதம் நடைபெற்றது.
சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று ஜனநாயக ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி கொறடா உத்தரவிட்டு இருந்தது. ஆனால் கொறடா வின் உத்தரவை மீறி 5 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக் கெடுப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
90 உறுப்பினர்கள் கொண்ட அரியானா சட்டசபையில் தற்போது பா.ஜனதாவுக்கு 41 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜனதா அரசுக்கு 6 சுயேட்சை மற்றும் அரியானா லோகித் கட்சி எம்.எல்.ஏ.வின் ஆதரவு உள்ளது. எனவே ஜெ.ஜெ.பி. ஆதரவு இல்லாவிட்டாலும் பெரும்பான்மைக்கு தேவையான பலம் தங்களிடம் இருப்பதாக பா.ஜனதா தெரிவித்தது.
இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க. தலைமையிலான அரியானா அரசு வெற்றி பெற்றுள்ளது. அரியானா சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் நயப் சிங் சைனி அரசு வெற்றி பெற்றது. இதன்மூலம், நயப் சிங் சைனி தலைமையிலான அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், பா.ஜ.க வை சேர்ந்த 41 எம்.எல்.ஏக்களும், ஏழு சுயேச்சை எம்.எல்,ஏக்களில் 6 பேரும், லோஹித் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் என மொத்தம் 48 எம்.எல்.ஏ.,க்கள் நயப் சிங் சைனிக்கு ஆதரவாக ஓட்டளித்தனர்.
சட்டசபையில் முதல்-மந்திரி நயப் சிங் சைனி பேசியதாவது: நான் எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவன். என் குடும்பத்தில் யாரும் அரசியலில் இல்லை. நான் பா.ஜ.க. கட்சிக்காரன். இன்று எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.