சத்தீஷ்கார் அரசின் சிறப்பு ஏற்பாடு: 10, 12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்கள் ஹெலிகாப்டரில் பறந்து குதூகலம்

சத்தீஷ்கார் அரசின் சிறப்பு ஏற்பாட்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் ஹெலிகாப்டரில் பறந்து குதூகலித்தனர்.

Update: 2022-10-08 19:22 GMT

முதல்-மந்திரி அறிவிப்பு

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதலிடம் பெறும் மாணவ, மாணவிகள் ஹெலிகாப்டரில் வான் உலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகல் கடந்த மே மாதம் அறிவித்திருந்தார். அதன்படி, 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற 125 மாணவ, மாணவிகள் நேற்று ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

முதல் முறையாக ஹெலிகாப்டர் உலா

ராய்ப்பூரில் அவர்கள் குழு குழுவாக ஒரு 7 இருக்கை ஹெலிகாப்டரில் பறந்து குதூகலித்தனர். முதல்-மந்திரியின் அறிவிப்பின்படி அந்த மாணவ, மாணவிகள் ஹெலிகாப்டர் உலா அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பொதுத்தேர்வில் முதலிடம் பெற்றவர்கள் இப்படி மகிழ்விக்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் ஒரு பொதுமக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தார்.

அந்த மாணவர்களுக்கு ராய்ப்பூர் போலீஸ் பயிற்சி மைதானத்தில் ஒரு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.

மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

ஹெலிகாப்டரில் வானில் பறந்தது சிலிர்ப்பூட்டும் அனுபவம் என்று மாணவ, மாணவிகள் பூரிப்புடன் தெரிவித்தனர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ராய்ப்பூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற வர்ஷா தேவன்கன் என்ற மாணவி, ஹெலிகாப்டரில் பறந்தது உற்சாகமாக இருந்தது என்றும், இதனால் தனது நீண்டநாள் கனவு நனவானது என்றும் கூறினார்.

ஹெலிகாப்டரில் வான் உலா செல்லும் வாய்ப்பை பெற்ற மாணவர்களில், நக்சலைட்டு ஆதிக்கம் நிறைந்த நாராயண்பூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பில் முதலிடம் பெற்ற தேவானந்த் கமேதியும் ஒருவர். அந்த மாணவர் கூறுகையில், 'எங்கள் பகுதியில் சரியான சாலைவசதி கூட கிடையாது. அப்படிப்பட்ட சூழலில் இருந்து வந்த எனக்கு ஹெலிகாப்டரில் பறந்தது மறக்கமுடியாத அனுபவம்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்