நாடு முழுவதும் 75 கடற்கரைகளில் தூய்மை பணி; மத்திய மந்திரி அறிவிப்பு

நாடு முழுவதும் 75 கடற்கரைகளின் கடலோர பகுதிகள் தூய்மைப்படுத்தப்படும் என மத்திய மந்திரி கூறியுள்ளார்.

Update: 2022-06-17 09:04 GMT



புதுடெல்லி,



சர்வதேச கடலோர பகுதிகள் தூய்மை தினம் நடப்பு 2022ம் ஆண்டில் செப்டம்பரில் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதற்காக மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் தலைமையகத்தில் உள்ள பிருத்வி பவனில் நடந்த கூட்டத்தில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டார்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சி பற்றி மந்திரி சிங் கூறும்போது, ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பரில் 3வது சனிக்கிழமை இந்த தினம் கடைப்பிடிக்கப்படும்.

இந்த முறை, அது பிரதமர் மோடியின் பிறந்த நாளில் வருகிறது. அவர் தூய்மை, கடற்கரை பாதுகாப்பு, சுற்று சூழல் மற்றும் அனைத்து வடிவிலான பருவகால பாதுகாப்பு ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை தொடக்கி வைப்பவராக இருப்பவர். இதேபோன்று, நாடு சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டுக்கான கொண்டாட்டங்களும் இந்த ஆண்டுடன் சேர்ந்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.

கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் இந்த நிகழ்ச்சியானது வருகிற ஜூலை 3ந்தேதி தொடங்கி செப்டம்பர் 17ல் முடியும். இதில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்பார்கள். நாடு முழுவதும் 75 கடற்கரைகளின் கடலோர பகுதிகள் தூய்மைப்படுத்தப்படும் என மத்திய மந்திரி கூறியுள்ளார்.

முதன்முறையாக மிக நீண்ட கடலோர தூய்மை பணியானது, அதிக அளவில் மக்கள் கலந்து கொள்ளும் வகையில் நடைபெற உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன் தொடக்க நிகழ்ச்சியில், மக்களிடையே பிரபலம் அடைந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதன்படி, கடலோர பகுதியில் இருந்து 1,500 டன் குப்பைகளை நீக்குவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பெரிய அளவில் நிவாரணம் கிடைக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்