6-ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் சாவு

தார்வாரில் 6-ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் உயிரிழந்தான்.

Update: 2022-12-02 18:45 GMT

உப்பள்ளி:

பள்ளி மாணவன்

தார்வார் மாவட்டம் கல்கட்டகி டவுன் பகுதியை சேர்ந்தவன் முகமது ரபி மணியார் (வயது 13). இவன் அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று பள்ளியில் விளையாடி கொண்டிருந்த முகமது, திடீரென்று மயங்கி விழுந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள், உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ஆசிரியர்கள், உடனடியாக முகமதுவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு அவனை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது, முகமது ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மாரடைப்பால் சாவு

இதனை கேட்டு முகமதுவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கல்கட்டகி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது முகமது ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டு வந்ததும், பள்ளியில் விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு முகமதுவின் உடல், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து கல்கட்டகி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிர்ச்சி

ஏற்கனவே கர்நாடகத்தில் கடந்த 2 மாதங்களில் மாரடைப்பால் 3 மாணவ, மாணவிகள் உயிரிழந்துள்ளனர். தற்போது முகமது 4-வதாக உயிரிழந்தான். கடந்த மாதம் அதாவது சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேயில் 14 வயதான வைஷ்ணவி என்ற மாணவியும், உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவை சேர்ந்த 13 வயது அனுஸ்ரீ என்ற மாணவியும், தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியாவை சேர்ந்த 7 வயது மோக்‌ஷித் என்ற மாணவனும் மாரடைப்பால் உயிரிழந்திருந்தனர்.

பொதுவாக ரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் கர்நாடகத்தில் 2 மாதங்களில் மாரடைப்பால் 4 மாணவ-மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்