சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினருடன் மோதல் - 3 நக்சல்கள் உயிரிழப்பு
பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள போம்ரா, ஹர்தராய் மற்றும் மிச்செபேடா உள்ளிட்ட கிராமங்களில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கான்கேர் மாவட்ட எஸ்.பி. தலைமையில் மாவட்ட ரிசர்வ் காவல் படை(டி.ஆர்.ஜி) மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது போம்ரா-ஹர்தராய் கிராமங்களுக்கு இடையே உள்ள மலைப்பகுதியில் நக்சல்கள் மற்றும் பாதுகாப்பு படையினரிடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் 3 நக்சல்கள் கொல்லப்பட்ட நிலையில், மற்றவர்கள் அங்கிருந்து தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த நக்சல்களின் உடல்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.