அமெரிக்கா உடனான ராணுவ பயிற்சிக்கு சீனா கண்டனம்; இந்தியா பதிலடி

சீன எல்லையருகே இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சிக்கு கண்டனம் தெரிவித்த சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.;

Update:2022-12-01 20:52 IST



புதுடெல்லி,


உத்தரகாண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. இந்த பகுதியானது சீன எல்லையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

இதன்படி, ரஷியாவை சேர்ந்த மி-17வி5 ரக ஹெலிகாப்டரில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் இணைந்து, மிக அதிக உயரத்தில் பறந்து சென்று போர் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்தியா மற்றும் அமெரிக்காவின் 18-வது கூட்டு ராணுவ பயிற்சியான யுத் அப்யாஸ் 2022 என்ற பெயரில் இரு நாடுகளும் இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுகின்றன.

அமெரிக்க ராணுவத்தின் 11-வது வான்படை பிரிவை சேர்ந்த வீரர்களும், இந்திய ராணுவத்தின் அசாம் படை பிரிவினரும் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டு பயிற்சியின்போது மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படும். இயற்கை சீற்றத்தின் போது, நிவாரண நடவடிக்கைகளை விரைவாகவும், ஒருங்கிணைந்தும் செயல்படுத்துவதற்கான பயிற்சியை இரு நாடுகளும் பெறவுள்ளன.

இந்தியா, அமெரிக்கா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சிக்கு சீனா நேற்று தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தது. அசல் எல்லை கோட்டுக்கு அருகே நடந்து வரும் இந்த போர் பயிற்சியானது, இந்தியா மற்றும் சீனா இடையே மேற்கொள்ளப்பட்ட எல்லை ஒப்பந்தங்களை மீறும் வகையில் உள்ளது என தெரிவித்தது.

சீனா மற்றும் இந்தியா இடையே கடந்த 1993 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீறும் செயல் என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.

இந்த கூட்டு ராணுவ பயிற்சியானது, சீனா மற்றும் இந்தியா இடையேயான பரஸ்பர நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், கடந்த 2020-ம் ஆண்டு மே மாதத்தில் கிழக்கு லடாக்கில், இதே சீனா தனது படைகளை அதிக எண்ணிக்கையில் குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அது சர்ச்சைக்குரிய அசல் எல்லை கோட்டு பகுதியில் நடந்தது. அப்போது, இருதரப்பு ஒப்பந்தங்களை மீறும் வகையில் சீனா நடந்து கொண்டது. எனினும், பேச்சுவார்த்தை வழியே இதற்கு தீர்வு காணப்பட்டது. படைகள் வாபஸ் பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி வாராந்திர ஊடக சந்திப்பில் இன்று பேசும்போது, அமெரிக்காவுடன் ஆலி பகுதியில் நடந்து வரும் இந்த போர் பயிற்சிகளுக்கும், சீனா மற்றும் இந்தியா இடையே கடந்த 1993 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

இந்த ஒப்பந்தங்களை போட்டு விட்டு அவர்களே விதிமீறிய விசயங்களை சீன தரப்பு நினைத்து பார்க்க வேண்டும். யாருடன் பயிற்சி செய்ய வேண்டும் என்பது பற்றி இந்தியா தேர்வு செய்து கொள்ளும்.

இந்த விவகாரத்தில் இந்தியா, மூன்றாம் தரப்பு நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் எதுவும் அளிக்கவில்லை என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்