முதல்-மந்திரி சித்தராமையா வெறுப்பு அரசியல் செய்கிறார் நளின்குமார் கட்டீல் குற்றச்சாட்டு
முதல்-மந்திரி சித்தராமையா வெறுப்பு அரசியல் செய்கிறார் என பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் குற்றம் சாட்டி உள்ளார்.
மங்களூரு-
முதல்-மந்திரி சித்தராமையா வெறுப்பு அரசியல் செய்கிறார் என பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் குற்றம் சாட்டி உள்ளார்.
பசுவதை தடை சட்டம்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது. இந்தநிலையில் காங்கிரசின் அரசு தற்போது துக்ளக் அரசு போல ஆரம்பமாகி உள்ளது. மகாத்மா காந்தி கோசந்ததியின் உயிர்வாழ்வை பற்றி பேசினார். பசு என்பது தாயின் வடிவம். மாடு பிழைத்தால் விவசாயம் பிழைக்கும். இந்தியா சுதந்திரம் பெற்றபோது அனைத்து மாநிலங்களிலும் பசுவதை தடை சட்டம் இருந்தது.
காங்கிரசின் சமாதான கொள்கையில் இருந்து இந்த சட்டம் திரும்ப பெறப்பட்டது. சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, மாநிலத்தில் அதிக பசு கொலைகள் நடந்தன. பசுவை கொல்பவர்களுக்கு காங்கிரஸ் அரசு பாதுகாப்பு அளித்துள்ளது.
வெறுப்பு அரசியல்
பசுவதை தடை சட்டத்தை திரும்ப பெற்றால் மாநிலம் முழுவதும் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடைபெறும். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 51 பைசா உயர்த்தி உள்ளது. 200 யூனிட் மின்சாரம் தருவதாக கூறி மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை காங்கிரஸ் அரசு ஏமாற்றி உள்ளது. சக்ரவர்த்தி சுலிபெலே கைது செய்யப்படுவார் என மந்திரி கூறியுள்ளார். முடிந்தால் அவரை காங்கிரஸ் அரசு கைது செய்யட்டும். காங்கிரஸ் பேரணியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பப்படுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முதல்-மந்திரி சித்தராமையா வெறுப்பு அரசியல் செய்து வருகிறார். காங்கிரஸ் கட்சி பசுவதை தடை சட்டம், மதமாற்றம் தடை சட்டம் ஆகியவற்றை திரும்ப பெறுவதாக கூறி வருகிறது. காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலின் போது ராமர், அனுமனை வைத்து வாக்கு சேகரித்தனர்.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்
ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் இந்து மத உணர்வுகளை தூண்டி வருகிறது. இதற்காக போராடும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்வதாக மாநில காங்கிரஸ் கூறி வருகிறது. எந்த ஒரு அமைப்பையும் தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய முதல்-மந்திரி சித்தராமையாவால் முடியாது. உங்களுக்கு தைரியம் இருந்தால் கர்நாடகாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்புகிறவர்களை கைது செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.