கிராமத்திற்குள் புகுந்து கன்று குட்டியை அடித்து கொன்ற சிறுத்தை

அரக்கல்கோடு அருகே கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை கன்று குட்டியை அடித்து கொன்றுவிட்டு சென்றதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Update: 2023-09-17 21:21 GMT

ஹாசன்:

அரக்கல்கோடு அருகே கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை கன்று குட்டியை அடித்து கொன்றுவிட்டு சென்றதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

சிறுத்தை அட்டகாசம்

ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தாலுகா சானுபோகனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜண்ணா. அதே பகுதியில் இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டம் வனப்பகுதியையொட்டி உள்ளது. இதனால் அடிக்கடி சிறுத்தை, புலிகள் தோட்டத்திற்குள் புகுந்து கூலி தொழிலாளிகளை அச்சுறுத்தி வருகின்றன. மேலும் தோட்டத்தின் அருகே மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடு, மாடுகளை சிறுத்ைத வேட்டையாடிவிட்டு செல்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை நாயை அடித்து கொன்று இழுத்து சென்றது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ராஜண்ணா என்பவரின் வீட்டிற்குள் சிறுத்தை புகுந்துள்ளது. அந்த சிறுத்தை ராஜண்ணாவின் வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த கன்று குட்டியை அடித்து கொன்றுவிட்டு சென்றது. மேலும் அந்த கன்று குட்டியை வனப்பகுதிக்குள் இழுத்து செல்ல முயன்றது. ஆனால் முடியவில்லை. இதையடுத்து ராஜண்ணாவின் தோட்டத்தில் கன்று குட்டியின் உடலை போட்டுவிட்டு சிறுத்தை அங்கிருந்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

கிராம மக்கள் போராட்டம்

இந்தநிலையில் நேற்று காலை ராஜண்ணா எழுந்து வந்து பார்த்தபோது, கன்று குட்டி மாயமாகியிருந்தது. இதையடுத்து அவர் தோட்டத்திற்கு சென்று பார்த்தார். அங்கு கன்று குட்டி செத்து கிடந்தது.

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளை சுற்றி வளைத்து போராட்டம் நடத்தினர். கடந்த ஒரு மாதமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

வீட்டில் வளர்க்கப்படும் நாய், ஆடு, மாடுகளை சிறுத்தை அடித்து கொன்றுவிட்டு செல்கின்றன. மேலும் தொழிலாளிகள் தோட்டத்திற்கு வேலைக்கு செல்ல முடியாத அளவிற்கு சிறுத்தை அட்டகாசம் இருந்து வருகிறது. எனவே வனத்துறை அதிகாரிகள் அந்த சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறினர். இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்