சிறுத்தை தாக்கியதில் 6 வயது சிறுமி படுகாயம்

ஹனூர் அருகே வீட்டுக்குள் புகுந்து சிறுத்தை தாக்கியதில் 6 வயது சிறுமி படுகாயமடைந்தாள். அவளுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-06-27 21:03 GMT

சாம்ராஜ்நகர்:

ஹனூர் அருகே வீட்டுக்குள் புகுந்து சிறுத்தை தாக்கியதில் 6 வயது சிறுமி படுகாயமடைந்தாள். அவளுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

6 வயது சிறுமி

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சிக்கமலாபுரா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டது, கக்கலிகுந்தி கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் அடிக்கடி சிறுத்தை, காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி லலிதா. இந்த தம்பதிக்கு சுசீலா (வயது 6) என்ற மகள் இருக்கிறாள். இந்த சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் தனது பெற்றோருடன் வீட்டின் முன்பகுதி திண்ணையில் அமர்ந்திருந்த சிறுமி, செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தாள்.

சிறுத்தை தாக்கியது

அந்த சமயத்தில் அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து ஒரு சிறுத்தை ராமுவின் வீட்டுக்குள் புகுந்துள்ளது. கண்இமைக்கும் நேரத்தில் அந்த சிறுத்தை ராமுவை தாக்க முயன்றுள்ளது. அவர் சத்தம் போட்டதும் அருகில் அமர்ந்திருந்த சிறுமி சுசீலாவை சிறுத்தை தாக்கியது.

இதனால் அதிர்ச்சியில் ராமுவும், அவரது மனைவி லலிதாவும் கூச்சல் போட்டு அலறினர். இதையடுத்து சிறுமியை இழுத்துச் சென்ற சிறுத்தை சிறிது தூரத்தில் அவளை போட்டு விட்டு தப்பி அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

தீவிர சிகிச்சை

சிறுத்தை தாக்கியதில் சிறுமியின் வாய், தொண்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிறுமியை சிகிச்சைக்காக பெற்றோர் சேர்த்தனர். அங்கு சுசீலாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் சிறுமி மேல் சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியின் தாடையில் படுகாயம் ஏற்பட்டு இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தந்தை ராமு தெரிவித்தார்.

வனத்துறை விசாரணை

இதற்கிடையே சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பி.ஆர்.டி. வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் சிறுமியின் பெற்றோர், அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அப்பகுதி மக்கள், சிறுமியை தாக்கிய சிறுத்தையை உடனே பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்