'நீட்' தேர்வு மாணவர்களுக்காக பிரதமரின் ஊர்வல திட்டத்தில் மாற்றம்
பிரதமர் மோடி அறிவுறுத்தலின்பேரில் ‘நீட்’ தேர்வு மாணவர்களுக்காக பெங்களூருவில் நடக்கும் அவரது ஊர்வல திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ஷோபா கூறியுள்ளார்.
பெங்களூரு:-
மத்திய மந்திரி ஷோபா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி 6-ந் தேதி(இன்று), 7-ந் தேதி(நாளை) பெங்களூருவில் ஊர்வலம் நடத்துகிறார். நாளை(ஞாயிற்றுக்கிழமை) மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வு நடக்கிறது. அந்த தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கபட கூடாது என்று கருதி பிரதமரின் ஊர்வல திட்டத்தில் சிறிது மாற்றம் செய்துள்ளோம். இந்த மாற்றம் திடீரென முடிவு செய்யப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி இந்த மாற்றத்தை செய்யும்படி பிரதமரே கூறியுள்ளார். பிரதமரின் ஊர்வலம் நாளை(இன்று) காலை 10 மணிக்கு பெங்களூரு தெற்கு பகுதியில் ஆர்.பி.ஐ. மைதானத்தில் சோமேஸ்வரா பவனில் இருந்து தொடங்கி மல்லேசுவரத்தில் உள்ள சாங்கி டாங்கி வரை நடக்கிறது. இதன் தூரம் 26½ கிலோ மீட்டர் ஆகும். இந்த ஊர்வலம் மதியம் 1.30 மணிக்கு நிறைவடையும். இதை 7-ந் தேதி நடத்த திட்டமிட்டு இருந்தோம். நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக இதை ஒரு நாள் முன்னதாகவே நடத்துகிறோம். பெங்களூரு மக்களை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் மோடி இந்த ஊர்வலத்தை நடத்துகிறார். ஒரே நாளில் அதிக தூரம் ஊர்வலம் நடத்தினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், ஊர்வலத்தை இரண்டு நாளாக மாற்றியுள்ளோம்.
போலீசாருக்கு உத்தரவு
நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு 2-வது நாள் ஊர்வலம் திப்பசந்திரா கெம்பேகவுடா சிலையில் இருந்து தொடங்கி டிரினிட்டி சர்க்கிள் வரை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்கிறது. இந்த ஊர்வலம் காலை 11.30 மணியளவில் நிறைவடையும். இந்த ஊர்வலத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த ஊர்வலத்துக்கு தொந்தரவு ஏற்படுத்த காங்கிரஸ் சதி செய்துள்ளதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது.
பிரதமர் ஊர்வலம் செல்லும் பாதையில் காங்கிரஸ் தொண்டர்களை வைத்து ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் நாங்கள், ஆம்புலன்ஸ் வந்தால் அவற்றுக்கு வழிவிட்டு அதை ஆஸ்பத்திரி வரை அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளோம். மேலும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு யாருக்காவது இடையூறு ஏற்பட்டால், அவர்களை சம்பந்தப்பட்ட தேர்வு மையத்திற்கு அழைத்து செல்ல போலீசார் ஏற்பாடு செய்யும்படி கூறியுள்ளோம். அதனால் யாருக்கும் தொந்தரவு ஏற்படாமல் பிரதமரின் ஊர்வலத்தை நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளோம். ஊர்வலத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பா.ஜனதா தொண்டர்கள் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு ஷோபா கூறினார்.
கட்டுப்பாடுகள் விதிப்பு
பெங்களூருவில் இன்று பிரதமர் 26½ கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்வலம் நடத்த உள்ளதால், மெஜஸ்டிக் உள்பட பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நொிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பொதுமக்கள் ஊர்வலம் நடைபெறும் சாலையை பயன்படுத்துவதற்கு பதிலாக மாற்று சாலைகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுபோல் மோடி வருகையையொட்டி பெங்களூருவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கபட்டு இருக்கிறது. அவர் ஊர்வலம் செல்லும்போது அடுக்குமாடி குடியிருப்புகளின் மேல் நிற்க கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.