நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 13-ல் ஏவப்படும்
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய ‘சந்திரயான்-3’ விண்கலம் வருகிற 13-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.;
'சந்திரயான்-1' விண்கலம்
விண்வெளி துறையில் வியக்கத்தகு சாதனைகளை செய்து வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவு குறித்து ஆய்வு செய்ய அதிக தீவிரம் காட்டுகிறது. இதற்காக கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி நிலவுக்கு 'சந்திரயான்-1' என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவி இந்தியா நிலவில் தடம் பதித்து உலக நாடுகளின் புருவத்தை உயர்த்தி பார்க்க செய்தது இஸ்ரோ. அத்துடன் நிலவில் செய்த ஆய்வில் அங்கு தண்ணீர் இருப்பதையும் கண்டுபிடித்தது 'சந்திரயான்-1' விண்கலம்.
நிலவின் தென் துருவம்
தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் கனிமங்கள், ரசாயன கலவை, பவுதீக துகள்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய திட்டமிட்ட இஸ்ரோ, கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 22-ந் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. நிலவில் சவாலான பகுதியாக பார்க்கப்படும் எந்த நாடும் ஆராய்ச்சியில் இறங்காத தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்க திட்டமிடப்பட்டது. பூமி மற்றும் நிலவின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக கடந்த சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. ஆனால் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரின் மெதுவான தரையிறக்கம் (சாப்ட் லேண்டிங்) சவாலாக மாறியது.
குறிப்பாக, விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 கடைசி கட்டத்தில் நிலவில் இறங்கும் போது அதன் கட்டுப்பாட்டை இழந்து நிலவுடன் மோதியது. இதனால் சந்திரயான்-2 பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தோல்வியில் துவண்டுவிடாமல் தொடர்ந்து ரூ.615 கோடி செலவில் சந்திரயான்-3 திட்டத்தை அறிவித்து தற்போது பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் நிறைவு செய்து உள்ளனர்.
பாகுபலி ராக்கெட்
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-
இஸ்ரோவின் லட்சிய திட்டமான நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான்-3 விண்ணில் ஏவுவதற்கான இறுதிகட்ட பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவின் குண்டு பையன் மற்றும் பாகுபலி ராக்கெட் என்ற செல்லப்பெயரை கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் தற்போது எல்.வி.எம். 3 ராக்கெட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலம் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்படுகிறது.
முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட் 43.5 மீட்டர் நீளமும், 640 டன் எடையும் கொண்டது. திட, திரவ, கிரையோஜெனிக் என 3 நிலைகளில் எரிபொருள் உதவியால் விண்ணில் பாயும் ராக்கெட் 4 டன் எடையை புவிநிலைச் சுற்றுப்பாதைக்கு எடுத்துச் செல்லும்.
பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு 6 டன்னுக்கும் அதிகமான எடையை எடுத்துச்செல்ல முடியும். இப்போது சந்திரயான்-3 விண்கலத்தில் ஆர்பிட்டர் இல்லை. நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்கி உலாவும் வகையிலான விண்கலம், உந்துவிசை, லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய 3 அமைப்புகளின் கலவையில் இயக்கப்படுகிறது.
13-ந் தேதி பாய்கிறது
விண்கலத்தை ஏந்தி செல்லும் மார்க்-3 ராக்கெட்டின் அனைத்து பரிசோதனைகளும் நிறைவு பெற்று தயார் நிலையில் உள்ளது. தொடர்ந்து, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து அதிக எடையை தாங்கி செல்லும் மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் வரும் 13-ந் தேதி (வியாழக்கிழமை) மதியம் 2.30 மணி அளவில் விண்ணில் பாய்கிறது. இதற்கான அனைத்து சோதனைகளும் நடந்து முடிந்த நிலையில் விண்ணில் ஏவுவதற்கான பணி தற்போது தொடங்கியுள்ளது.
ராக்கெட் ஏவுதலின்போது எந்த பிரச்சினையும் ஏற்படாத வகையில், கட்டமைப்பு, கணினிகள், மென்பொருள் மற்றும் சென்சார்களில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதிக எரிபொருளும் சேர்க்கப்பட்டு உள்ளது. நிலவில் தரையிறங்கும் லேண்டரின் கால்கள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. லேண்டர் தொடர்ந்து இயங்க அதிக ஆற்றல் உற்பத்திக்காக பெரிய சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
மற்றொரு கூடுதல் சென்சாரும் இப்போது சேர்க்கப்பட்டு உள்ளது. கடந்த முறை கனநொடியில் வெற்றி கைநழுவிய சூழலில், இம்முறை நிலவில் சந்திரயான்-3 இமாலய சாதனையை தனதாக்கும் என நம்பப்படுகிறது. அத்துடன், இந்த சந்திரயான்-3 திட்டம் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆய்விற்கு மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.