'மன் கி பாத்' ஒலிபரப்பை கேட்காததால் 36 நர்சிங் மாணவிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பிரதமரின் 100-வது ‘மன் கி பாத்’ ஒலிபரப்பை கேட்காததால் 36 நர்சிங் மாணவிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.;

Update:2023-05-12 00:50 IST

சண்டிகார்,

சண்டிகார் மாநிலத்தில் உள்ளது பிஜிமர் தேசிய நர்சிங் கல்வி மையம். மத்திய அரசு கல்வி நிறுவனமான இங்கு கடந்த 30-ந் தேதி பிரதமர் மோடி வானொலியில் பேசிய 100-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சி ஒலிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கல்லூரியில் படிக்கும் முதல் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் கண்டிப்பாக இந்த ஒலிபரப்பு நிகழ்ச்சியை கேட்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

கலந்து கொள்ளாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இருந்தபோதிலும், 36 மாணவிகள், அந்த ஒலிபரப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களில் 28 பேர் மூன்றாம் ஆண்டு மாணவிகள், 8 பேர் முதலாம் ஆண்டு மாணவிகள் என்று தெரியவந்தது.

இதையடுத்து இந்த மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீசு ஒட்டப்பட்டது. அவர்கள் எச்சரிக்கப்பட்டபடி, ஒரு வாரத்திற்கு விடுதியைவிட்டு வெளியே எங்கும் செல்ல முடியாது என்று கல்லூரி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த உத்தரவு சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்