ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து சம்பாய் சோரன் விலகல்
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து சம்பாய் சோரன் தற்போது அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரியும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன், ராஞ்சியில் அவரது ஆதரவாளர்களுடன் வரும் 30-ந்தேதி பா.ஜ.க.வில் இணைய உள்ளார்.
முன்னதாக ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் சிறை சென்றபோது அம்மாநிலத்தின் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் சம்பாய் சோரன். சுமார் 5 மாதங்கள் அவர் முதல்-மந்திரியாக இருந்தார். ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஜூன் இறுதியில் ஜாமீன் கிடைத்த நிலையில், சம்பாய் சோரன் தனது முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டியிருந்தது. அப்போது நடந்த சில விஷயங்கள் தன்னை காயப்படுத்தியதாக சம்பாய் சோரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும், ஜார்க்கண்ட் மாநில நலனுக்காக பா.ஜ.க.வில் இணைய முடிவெடுத்துள்ளதாக சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பா.ஜ.க.வில் இணைய வேண்டும் என்ற எனது முடிவானது ஜார்க்கண்ட் மாநிலத்தின் நலன்களைச் சார்ந்தது. நான் போராட்டங்களுக்கு பழக்கப்பட்டுவிட்டேன். விரைவில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்தும், மந்திரி பதவியில் இருந்தும் விலகுவேன்" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், சம்பாய் சோரன் தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எனது குடும்பத்தைப் போன்றது. அந்த கட்சியில் இருந்து விலகுவேன் என்று கனவிலும் நான் நினைத்தது கிடையாது. ஆனால், கடந்த சில நாட்களாக நடந்த சில மோசமான சம்பவங்கள் என்னை இந்த கஷ்டமான முடிவை எடுக்க வைத்தது" என்று தெரிவித்துள்ளார்.