தனது அரசு காரை, சைத்ரா பயன்படுத்தியதாக பொய் தகவல்- சாளுமரத திம்மக்கா புகார்

தன்னுடைய அரசு காரை மோசடி வழக்கில் கைதான சைத்ரா பயன்படுத்தியதாக சமூக வலைதளங்களில் பரவிய பொய் தகவல் குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம் சாளுமரத திம்மக்கா புகார் அளித்துள்ளார்.

Update: 2023-09-20 18:45 GMT

பெங்களூரு:-

சாளுமரத திம்மக்கா காரை...

உடுப்பியை சேர்ந்த தொழில்அதிபர் கோவிந்தபாபு பூஜாரிக்கு எம்.எல்.ஏ. சீட் வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.5 கோடி வாங்கி மோசடி செய்ததாக இந்து அமைப்பை சேர்ந்த சைத்ரா குந்தாப்புரா உள்பட 9 பேரை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், சுற்றுச்சூழல் ஆர்வலரான சாளுமரத திம்மகாவின் காரை, மோசடி வழக்கில் கைதாகி உள்ள சைத்ரா பயன்படுத்தி வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.

கர்நாடக அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் விளம்பர தூதராக சாளுமரத திம்மக்கா இருப்பதால், அவருக்கு

மந்திரிகளுக்கு இணையான பதவியை அரசு கொடுத்துள்ளது. இதனால் அவருக்கு கர்நாடக அரசு சார்பில் காரும் வழங்கப்பட்டுள்ளது. அந்த காரில் தான் ரூ.5 கோடி மோசடி செய்ததாக சிக்கிய சைத்ரா சுற்றி திரிவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதனை சாளுமரத திம்மக்கா மறுத்து வந்திருந்தார்.

போலீஸ் கமிஷனரிடம் புகார்

இந்த நிலையில், பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று காலையில் சாளுமரத திம்மக்கா வருகை தந்தார். அவருடன் மகன் உமேசும் வந்திருந்தார்.

பின்னர் தன்னுடைய அரசு காரை சைத்ரா பயன்படுத்துவதாக சமூக வலைதளங்களில் பொய் தகவல்களை பரப்பியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கோரி போலீஸ் கமிஷனரிடம் சாளுமரத திம்மக்கா புகார் அளித்தார். அந்த புகாரை போலீஸ் கமிஷனர் பெற்றுக் கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

தவறு செய்தால் நடவடிக்கை

பின்னர் சாளுமரத திம்மக்கா நிருபர்களிடம் கூறுகையில், எனது கார் சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக சமூகவலைதளங்களில் பொய் தகவல் பரப்பியதால், மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். இதுபோன்ற செயல்களில் நான் ஈடுபடுவதில்லை.

இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மீது கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், என் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்