உணவு பொருட்களின் விலைகள் உயராமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் - பியூஸ் கோயல் தகவல்
குடும்ப பட்ஜெட்டில் எந்த அழுத்தமும் இல்லை என்பதை உறுதிப்படுத்த மோடி அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
மத்திய உணவு மற்றும் பொது வினியோக துறை மந்திரி பியூஸ் கோயல் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் உணவு பொருட்களின் விலையில் ஏற்றம் இல்லாமல் பார்த்துக்கொள்வது அரசின் உத்தியா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து பேசிய பியூஸ் கோயல், "நமது பெண் சக்தியின் குடும்ப பட்ஜெட்டில் எந்த அழுத்தமும் இல்லை என்பதை உறுதிப்படுத்த மோடி அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். அந்த வகையில் வெங்காயம், தக்காளி முதல் பருப்பு வரை அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் உயராமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்.
நாங்கள் எங்கள் சகோதரிகள் மற்றும் தாய்மார்களுடன் தொடர்ந்து இருப்போம். அவர்களுக்கு பொருளாதார அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம்.
நாங்கள் எங்கள் பெண் சக்தியை மதிக்கிறோம் என்பதை உறுதிசெய்யவும், அவர்கள் சிறந்த வீட்டு பட்ஜெட்டைப் பெற வேண்டும் என்பதற்ககாவும் தீவிரமாக வேலை செய்கிறோம்" என்றார்.