மக்களின் கவனத்தை திசை திருப்ப மத பிரச்சினைகள் எழுப்பப்படுகிறது - மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர்
மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்ப மத பிரச்சினைகள் எழுப்பப்படுவதாக, காங்கிரஸ் தலைவர் நானா படோலே குற்றம் சாட்டி உள்ளார்.
வகுப்புவாத பிரச்சினைகள்
மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. ரூபாய் மதிப்பு, தினமும் சரிந்து வருகிறது, பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் கடுமையாக அதிகரித்து வருகிறது.
ஆனால் மத மற்றும் வகுப்புவாத பிரச்சினைகளை எழுப்புவதின் மூலம் பா.ஜனதா நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இவர்கள் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான முடிவுகளை எடுக்கவேண்டும். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மக்கள் தொடர்பான பொதுநல பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசிடம் இருந்து விடைதேடும்.
உண்மையான மதம்
காங்கிரஸ் கட்சிக்கு இந்து மதம் குறித்து யாரும் கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. மனிதநேயமே உண்மையான மதம். அதைதான் வளர்க்க வேண்டும். மகா விகாஸ் அகாடி அரசு கடந்த 2 ஆண்டுகளாக மாநிலத்தின் வரிகளை உயர்த்தவில்லை. அதேநேரம் ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை தர மத்திய அரசு மறுக்கிறது.
மத்திய அரசின் கருவூலத்திற்கு செல்லும் பெரும்பாலான பணம் இங்கிருந்து வழங்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு செய்வது அநீதியாகும்.
எரிபொருள் வரி மூலம் மத்திய அரசு ரூ.26 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது. மத்திய அரசு தொடர்ந்து கொள்ளையடித்துவரும் நிலையில், மாநில அரசு வரியை குறைக்க வேண்டும் என பா.ஜனதா எதிர்பார்ப்பது தவறானது.
இவ்வாறு அவர் கூறினார்.