குடியுரிமை திருத்தச்சட்டத்தை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டம் என தகவல்

குடியுரிமை திருத்தச்சட்டத்தை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-02-27 18:05 GMT

டெல்லி,

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் உள்ள சிறுபான்மையினர் மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி 2014-க்கு முன் இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

இதன் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தில் சிறுபான்மையினராக இருந்து மதரீதியில் பிரச்சினைகளை சந்தித்து இந்தியாவில் அகதிகளாக வாழும் இந்து, சீக்கியம், புத்தம், ஜெயின், பார்சீ, கிறிஸ்தவம் ஆகிய மதத்தினரை சேர்ந்தவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கிடைக்கும். ஆனால், 2019ம் ஆண்டு குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டபோதும் சட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை.

இதனிடையே, தலைநகர் டெல்லியில் கடந்த 10ம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, குடியுரிமை திருத்தச்சட்டம் 2019ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. விதிகள் வெளியிடப்பட்டப்பின் குடியுரிமை திருத்தச்சட்டம் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அமல்படுத்தப்படும். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நமது இஸ்லாமிய சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு தூண்டப்பட்டுள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தில் மதரீதியில் தாக்குதலுக்கு உள்ளாகி இந்தியாவுக்கு வந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கவே குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்க அல்ல' என்றார். இதனால், இந்தியாவில் குடியுரிமை திருத்தச்சட்டம் விரைவில் அமலாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கான விதிகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்