இயற்கை விவசாயத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை - மத்திய மந்திரி தோமர்

இந்தியாவில் இயற்கை விவசாயத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.;

Update:2022-12-05 20:54 IST

புதுடெல்லி,

நீடித்த விவசாயத்திற்கான மண்வள மேலாண்மை குறித்த தேசியக் கருத்தரங்கு டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:

ரசாயன உரங்களை பயன்படுத்தும விவசாய முறையால் மண்வளம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் மாபெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது.

சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு ரசாயன முறையிலான விவசாயத்தைக் கைவிட உலக நாடுகள் முன்வர வேண்டும். மண் வளத்தை மேம்படுத்துவதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை விவசாயத்தை முன்னிலைபடுத்த வேண்டும்.

மத்திய அரசு இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம் என்ற பிரத்யேக திட்டத்தை செயல்படுத்த 1,584 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவின் பாரம்பரிய முறையான இயற்கை விவசாயத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆந்திரப் பிரதேசம், குஜராத், இமாச்சலப்பிரதேசம், ஒடிசா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இயற்கை விவசாய முறையை செயல்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த ஓராண்டில் 17 மாநிலங்களில் மொத்தம் 4.78 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு கூடுதலாக இயற்கை முறை விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்