பணவீக்க மேலாண்மைக்கு மத்திய அரசு மட்டுமே பொறுப்பாக முடியாது: மத்திய நிதி மந்திரி பேச்சு

நாட்டில் தெலுங்கானா 8.58 சதவீதம் என்ற அளவில் பணவீக்கம் அதிகம் கொண்ட மாநில வரிசையில் முதல் இடத்தில் உள்ளது.

Update: 2022-09-08 15:10 GMT



புதுடெல்லி,



சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் பணவீக்கம் கட்டுப்படுத்துவது பற்றிய மாநாட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பணவீக்கம் காணப்படுகிறது.

இதேபோன்று, ஜி.எஸ்.டி., சந்தை உருவாக்கம், சுங்க சாவடிகள் மற்றும் வரிகளை நீக்குவது மற்றும் சுதந்திர முறையிலான சரக்குகள் போக்குவரத்து ஆகியவையும் கூட ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொன்று வேறுபடுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதுள்ள கலால் வரியை, 2021-ம் ஆண்டு நவம்பர் மற்றும் 2022-ம் ஆண்டு மே என முடிந்தவரையில் மத்திய அரசு இரண்டு முறை குறைத்தது. இதனால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோதிலும் அதனை பெறும் கடைக்கோடி வாடிக்கையாளரின் சுமை குறைக்கப்பட்டது.

எனினும், அதுபோன்று சில குறிப்பிட்ட மாநிலங்கள் செயல்படவில்லை. மாநில மட்டத்திலான வரிகளையே குறைத்தன என கூறிய அவர் உடனடியாக, நான் அரசியல் எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார்.

ஆனால், அந்த உண்மை நீடிக்கிறது. அதே வேளையில், எரிபொருள் விலையை குறைக்காத மாநிலங்களின் பணவீக்கம் தேசிய பணவீக்கத்திற்கும் கூடுதலாக உள்ளது என்ற விவரங்களையும் நான் கண்டறிந்தேன் என அவர் கூறியுள்ளார்.

பணவீக்க மேலாண்மைக்கு மத்திய அரசு மட்டுமே பொறுப்பாக முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதுபற்றி புள்ளியியல் அமைச்சகம் கடந்த மாதம் வெளியிட்ட தரவின்படி, 5 மாதங்களில் இல்லாத வகையில் கடந்த ஜூலையில், நாட்டில் சில்லரை பணவீக்கம் 6.71 என்ற அளவில் வெகுவாக குறைந்து இருந்தது.

எனினும், 22 மாநிலங்களில், பாதியளவிலான மாநிலங்களில் இந்த பணவீக்க அளவு 6.71 சதவீதத்திற்கும் கூடுதலாக இருந்தது. இதன்படி, நாட்டில், தெலுங்கானா 8.58 சதவீதம் என்ற அளவில் பணவீக்கம் அதிகம் கொண்ட மாநில வரிசையில் முதல் இடத்தில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்