பயன்பாடற்ற அடிபம்பை அகற்றாமல் சிமெண்டு சாலை; ஒப்பந்ததாரருக்கு மக்கள் கடும் கண்டனம்

சித்ரதுர்காவில் பயன்பாடற்ற அடிபம்பை அகற்றாமல் சிமெண்டு ரோடு அமைத்த ஒப்பந்ததாரருக்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-09-27 19:00 GMT

சித்ரதுர்கா;

அடிபம்பை அகற்றாமல்...

சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா தாலுகா ஸ்ரீரங்கப்புரா அருகே அனிவால் கிராமத்தில் கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடந்தது. இந்த நிலையில் சிமெண்டு சாலையை அமைத்த ஒப்பந்ததாரர்கள், அறிவியல்பூர்வமற்ற பணியை மேற்கொண்டுள்ளனர்.

அதாவது, அந்த கிராமத்தில் 3 தெருக்களை இணைக்கும் பகுதியில் ஒரு குடிநீர் அடிபம்ப் உள்ளது. அந்த அடிபம்ப் கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் பயனற்று இருக்கிறது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக அந்த அடிபம்ப் உள்ளது. ஆனால், ஒப்பந்ததாரர்கள், அந்த அடிபம்பை அகற்றாமல் அப்படியே சிமெண்டு சாலை அமைத்துள்ளனர். இதனால் அந்த அடிபம்ப் பாதி மூடிய நிலையில் உள்ளது.

மக்கள் கண்டனம்

இதற்கு அந்தப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் சிமெண்டு சாலை பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் 3 தெருக்களை இணைக்கும் பகுதியில் பயனற்ற நிலையில் ஒரு அடிபம்ப் உள்ளது.

அங்கு சிமெண்டு சாலை அமைக்க ஒப்பந்தம் எடுத்தவர்கள் அந்த அடிபம்பை அகற்றாமல் சாலை அமைத்துள்ளனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் மிகவும் இடையூறாக உள்ளது. இந்த பணிகளை செய்த ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மூடப்பட்ட நிலையில் இருக்கும் அடிபம்பை அகற்ற வேண்டும் என்றனர்.

விளக்கம்

இதுகுறித்து கிராம வளர்ச்சி அதிகாரி மஞ்சுநாத் கூறுகையில், சாலை அமைக்கும் பணியின்போது அடிபம்ப் இருப்பதை பணியாளர்கள் கவனிக்கவில்லை. இதுதொடர்பாக ஒப்பந்ததாரரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த அடிபம்ப் அகற்றப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்