நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. தகவல்

பள்ளி அதிகாரிகள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உள்பட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-25 17:47 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அப்போது, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. வினாத்தாளை திருடி, அவற்றுக்கு மருத்துவ மாணவர்கள் மூலம் விடை எழுத வைத்து, நீட் தேர்வர்களுக்கு விற்று பணம் சம்பாதித்ததாக தெரிய வந்தது.

இந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. இதுவரை 6 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் நீட் தேர்வு வினாத்தாளை திருடியதாக பங்கஜ் குமார் என்ற என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். அவரது ஏற்பாட்டில், வினாக்களுக்கு பதில் குறித்துக்கொடுத்த ஒரு மருத்துவ மாணவியும், 4 மருத்துவ மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து மேலும் 2 மருத்துவ மாணவர்களை சி.பி.ஐ. கைது செய்தது.

இதனையடுத்து ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் படித்த பி.டெக். பட்டதாரி சசிகாந்த் பஸ்வான் என்பவரையும் சி.பி.ஐ. கைது செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இதுவரை 33 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது என்றும் பீகாரில் போலீஸ் கைது செய்த 15 பேர் உள்பட பள்ளி அதிகாரிகள் மற்றும் மருத்துவ மாணவர்கள் என 36 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

மேலும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக இதுவரை பல குற்றச்சான்றுகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றும், நீட் தேர்வுக்கான வினாத்தாள் பெற்ற அனைத்து மாணவர்களையும் கண்டறியும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் நாளுக்கு நாள் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்