காவிரி விவகாரம்: தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதை எதிர்த்து கர்நாடகாவின் மண்டியாவில் தொடர் போராட்டம்

காவிரி விவகாரம் தொடர்பாக விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-09-24 09:33 GMT

பெங்களூரு,

டெல்லியில் கடந்த 12-ந்தேதி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. அப்போது, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது. இது கர்நாடக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மேலும், கடந்த 18-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது. அதனை ஏற்று கடந்த 19-ந்தேதியில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு அருகே அமைந்துள்ள மண்டியா மாவட்டத்தில், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து விவசாயிகள் மற்றும் உள்ளூர் கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

இதன்படி மண்டியா மாவட்டத்தில் 23-ந்தேதி(நேற்று) கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டன. மாவட்டத்தின் தலைமை செயலகமும் மூடப்பட்டது. மக்கள் பேரணியாக சென்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இன்றைய தினம் மண்டியா மாவட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்