சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; 2 நாட்களில் அறிக்கை - டி.ஜி.பி.க்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு

இந்த வழக்கு தொடர்பாக 2 நாட்களில் விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளர், டி.ஜி.பி.க்கு தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-06-05 09:43 GMT

ஐதராபாத்,

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் கடந்த 28-ந்தேதி, ஒரு தனியார் கிளப்பில் மது விருந்து நடைபெற்றது. இதில் 17 வயது மைனர் பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் பங்கேற்றுள்ளார். விருந்து முடிந்து வெளியே வந்த போது, அந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்து, அதே விருந்தில் கலந்து கொண்ட நபர்கள் சிலர் தங்கள் காரில் வலுக்கட்டாயமாக ஏற்றியுள்ளனர்.

அவரை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி, சுமார் 2 மணி நேரம் ஐதராபாத் முழுவதும் காரில் சுற்றி வந்தபடி, காரில் வந்த 5 பேரும் அந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து வீடு திரும்பிய சிறுமி, இது குறித்து தனது தந்தையிடம் கூற, அவர் போலீசில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து மானபங்க வழக்கு ஒன்றை போலீசார் பதிவு செய்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேர் என தெரிய வந்துள்ளது. அவர்களில் 3 பேர் மைனர் ஆவார்கள். இவர்கள் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் என கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கு விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியது. மானபங்க வழக்கை கூட்டு பலாத்கார வழக்காக போலீசார் மாற்றி உள்ளனர்.

இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இது தொடர்பாக உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக 2 நாட்களில் விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெலங்கானா மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்