இலங்கை கடற்படை சிறைபிடித்த தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரிய வழக்கு முடித்து வைப்பு - சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை

இலங்கை கடற்படை சிறைபிடித்த தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரிய வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது.

Update: 2022-11-04 21:36 GMT

புதுடெல்லி,

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த பொதுநல மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்ததது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், '2021-ம் ஆண்டு டிசம்பர் 18-ந்தேதி கைது செய்யப்பட்ட 68 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்' என்று தெரிவித்தார்.

ஆனால், அண்மையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், இந்த விவகாரத்துக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் மனுதாரர் வக்கீல் சி.ஆர்.ஜெயசுகின் வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள், சர்வதேச விவகாரங்களுக்கு நிரந்தர தீர்வை சுப்ரீம் கோர்ட்டு அளிக்க முடியாது என தெரிவித்தனர். பின்னர், 2021-ம் ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்ற மத்திய அரசின் பதிலை ஏற்ற நீதிபதிகள் இந்த மனுவை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்