சனாதன ஒழிப்பு பேச்சுக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு ஆஜராவதில் அமைச்சர் உதயநிதிக்கு விலக்கு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனுவுக்கு பதில் அளிக்க எதிர் மனுதாரர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம்" என்று பேசி இருந்தார். சனாதனம் குறித்த இவரின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது ராஜஸ்தான், உ.பி. மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்குகளை எல்லாம் ஒரே வழக்காக இணைக்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டில் உதயநிதி ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த ஏப்ரல் 1 ம் தேதி சுப்ரீம்கோர்ட்டு விசாரித்தது. ரிட் மனுவில் திருத்தம் செய்ய உதயநிதி ஸ்டாலினுக்கு மூன்று வாரகாலம் அவகாசம் அளித்து, விசாரணையை மே 6-ம் தேதிக்கு தள்ளி வைத்தது. இதனையடுத்து ரிட் மனு தொடர்பாக பதிலளிக்க மராட்டியம், உத்தரப்பிரதேசம், பீகார், ஜம்மு-காஷ்மீர், கர்நாடக மாநில அரசுகளுக்கும், புகார்தாரர்களுக்கும் பதிலளிக்க வேண்டும் என கடந்த மே 10-ம் தேதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்திருந்தது .
இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது சனாதன ஒழிப்பு பேச்சுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனுவுக்கு பதில் அளிக்க எதிர் மனுதாரர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.