ஆந்திராவில் மரத்தின் மீது கார் மோதி விபத்து - 4 பேர் பலி

ஆந்திராவில் மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.

Update: 2023-08-06 06:52 GMT

திருப்பதி,

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், ரவி வெங்கடம்பள்ளி, டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் மோகன் ரெட்டி (வயது 27). இவர் அதே பகுதியில் உள்ள அசோக் பில்லர் என்ற இடத்தில் ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வந்தார். மோகன் ரெட்டி நேற்று முன்தினம் புதிதாக கார் ஒன்றை வாங்கினார். அவரது நண்பர்களான ரமேஷ் ரெட்டி (28), விஷ்ணு சவுத்ரி (25), மதுசூதனன் ரெட்டி (25), சீனிவாச ரெட்டி (24) ஆகியோர் புதிய கார் வாங்கியதற்கு மது விருந்து வைக்கும்படி கேட்டனர்.

அதன்படி நேற்று முன்தினம் மாலை நண்பர்கள் 5 பேரும் காரை எடுத்துக்கொண்டு எர்ரகுண்ட பள்ளி மலைக்குச் சென்றனர். அங்கு இரவு முழுவதும் மது குடித்தனர். பின்னர் நேற்று அதிகாலை 3 மணிக்கு மீண்டும் காரில் வீட்டுக்கு புறப்பட்டனர். காரை மோகன் ரெட்டி ஓட்டினார். மது போதையில் இருந்த மோகன் ரெட்டி காரை அதிக வேகத்தில் ஓட்டி வந்தார். ரவி வெங்கடம்பள்ளி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் கார் பயங்கர வேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் இருந்த மதுசூதன் ரெட்டி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு அருகில் இருந்த வீட்டின் குளியலறைக்குள் விழுந்தார். மேலும் காரில் இருந்தவர்கள் காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டனர். அதிகாலையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் வெடிகுண்டு வெடித்து விட்டதாக எண்ணி விபத்து நடந்த இடத்திற்கு ஓடி வந்தனர்.

உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மோகன் ரெட்டி, ரமேஷ் ரெட்டி, விஷ்ணு சவுத்ரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிய வந்தது. மேலும் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த மதுசூதன் ரெட்டி, சீனிவாச ரெட்டி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக தாடி பத்ரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதுசூதன் ரெட்டி இறந்தார். சீனிவாச ரெட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது  இந்த கோர விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்