மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் தீவிபத்து: மேலும் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி சாவு
உப்பள்ளி மெழுகுவர்த்தி தொழிற்சாலை தீவிபத்தில் சிக்கியவர்களில் மேலும் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.;
உப்பள்ளி;
மெழுகுவர்த்தி தொழிற்சாலை
தார்வார் மாவட்டம் உப்பள்ளி புறநகர் தாரிஹால் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலையில் கடந்த மாதம் (ஜூலை) 23-ந்தேதி சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 8 பேர் படுகாயம் அடைந்து கிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து உப்பள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் பெண் சாவு
மேலும் தொழிற்சாலையின் உரிமையாளர் மஞ்சுநாத் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் ஒரு பெண் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர், உப்பள்ளி தாலுகா பண்டிவாடா கிராமத்தை சேர்ந்த நிர்மலா (வயது 29) என்பது தெரியவந்தது. இதனால் மெழுகுவர்த்தி தொழிற்சாலை தீ விபத்தில் பலி பண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், மெழுகுவர்த்தி தொழிற்சாலையின் பங்குதாரரான உப்பள்ளி சிரகட்டியை சேர்ந்த அப்துல்காதர் என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பங்குதாரர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.