பீகாரில் அமைச்சரவை விரிவாக்கம்: 31 எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பதவியேற்பு

பீகாரில் அமைச்சரவை விரிவாக்கத்தில் 31 எம்.எல்.ஏ.க்கள் இன்று மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர்.

Update: 2022-08-16 07:36 GMT

பாட்னா,



பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் சார்பில் முதல்-மந்திரியாக நிதீஷ் குமார் பதவி வகித்து வந்த நிலையில், பா.ஜ.க.வுடனான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகியது. இதனால் நிதிஷ் குமார் முதல்-மந்திரி பதவியில் இருந்து கடந்த 9-ந்தேதி விலகினார்.

கூட்டணியில் இருந்த பா.ஜ.க.வுடனான உறவை முறித்து கொண்டு வெளியே வந்த நிதிஷ் குமார், பின்னர் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிகள் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரியானார்.

பீகார் மாநில முதல்-மந்திரியாக 8-வது முறையாக அவர் கடந்த 10-ந்தேதி பதவியேற்று கொண்டார். பீகார் மாநில துணை முதல்-மந்திரியாக ராஷ்டீரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்று கொண்டார்.

இதனை தொடர்ந்து, பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், ராஷ்டீரிய ஜனதா தள கட்சி உறுப்பினர்கள் அமைச்சரவையில் அதிக அளவில் இடம்பெற கூடும் என கூறப்படுகிறது.

புதிய மந்திரிகள் இன்று பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். சட்டசபையில் அதிக எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்களை கொண்ட ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் 16 பேரும், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 11 பேரும், காங்கிரஸ் கட்சியில் இருந்து 2 பேரும், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. உள்பட 31 எம்.எல்.ஏ.க்கள் இன்று மந்திரிகளாக பதவியேற்கின்றனர்.

இதன்படி, அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடந்தது. இதில், ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் மதன் சாஹ்னி, ஷீலா குமாரி மண்டல், ராஷ்டீரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் லலித் குமார் யாதவ், சந்திரசேகர், அனிதா தேவி, சுதாகர் சிங், முகமது இஸ்ரைல் மன்சூரி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. முராரி பிரசாத் கவுதம் உள்ளிட்டோர் மந்திரிகளாக இன்று முறைப்படி பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

பீகார் அமைச்சரவையில் முதல்-மந்திரி உள்பட 36 மந்திரிகள் இடம் பெற முடியும். எனினும், சில மந்திரி பதவிகள் காலியாக விடப்பட்டு உள்ளன. வருங்காலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்போது அந்த பதவிகள் நிரப்பப்படும் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்