பட்ஜெட் நிதிஒதுக்கீடு விவகாரம்; மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு

நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் நிதிஒதுக்கீடு விவகாரங்களை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்ப முயன்றபோது, கேள்வி நேரத்தில் இடையூறு செய்ய கூடாது என மக்களவை சபாநாயகர் எச்சரிக்கை விடுத்து பேசினார்.

Update: 2024-07-24 09:50 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. இந்த தொடர், ஆகஸ்டு 12-ந்தேதி வரை நடைபெறும். இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில், நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்கள் அவையில் உறுப்பினர்களால் எழுப்பப்பட்டன. இந்த விவகாரத்தில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்து பேசினார்.

இந்த சூழலில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சியமைத்த பின்னர் முதன்முறையாக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இதுவாகும்.

இதில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று காலை 11 மணியளவில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். இதில், சில பொருட்களுக்கு வரி குறைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனினும், ஆந்திர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிதியொதுக்கீடு அறிவிக்கப்பட்டது.

இந்த இரு மாநிலங்களை ஆளும் அரசுகள், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு நேரடி ஆதரவை வழங்கியுள்ளன. இதனால், அந்த மாநிலங்களுக்கு சலுகை அளிக்கப்பட்டு உள்ளது என எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர். எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டாக கூறப்பட்டது.

இந்த சூழலில், மக்களவை இன்று காலை கூடியதும், எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பட்ஜெட் நிதிஒதுக்கீடு விவகாரங்களை எழுப்ப முயன்றனர். எனினும், கேள்வி நேரத்தில் இடையூறு செய்ய கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்து பேசினார்.

நாடாளுமன்ற பாரம்பரிய முறைகளை இருதரப்புகளை சேர்ந்த உறுப்பினர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அவை நடவடிக்கைகளுக்கு திட்டமிட்ட முறையில் இடையூறு ஏற்படுத்துகிறீர்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து செல்லும் வழியில், எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்ற இல்லத்திற்குள் நுழைய முடியாத சூழல் ஏற்பட்டது என்று பிர்லா மற்றும் நாடாளுமன்ற விவகார துறை மந்திரி கிரண் ரிஜிஜு அவையில் எடுத்து கூறினார்.

இந்த விவகாரம் பற்றி எம்.பி.க்கள் பலர் தன்னிடம் கடிதம் வழியே தெரிவித்தனர் என பிர்லா கூறினார். எனினும் அவையில், பட்ஜெட்டுக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதும் அவர்கள் அவை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்