2014-ம் ஆண்டுக்கு பின் பஞ்சாயத்துகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.2 லட்சம் கோடியாக உயர்வு: பிரதமர் மோடி பேச்சு
2014-ம் ஆண்டுக்கு பின் பஞ்சாயத்துகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.;
புதுடெல்லி,
பிரதமர் மோடி டெல்லி தொடங்கி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 7 நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார். அவரது இந்த சுற்றுப்பயணத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் உரையாற்றுகிறார்.
இதன்படி அவரது பயணம் டெல்லியில் இருந்து இன்று தொடங்கியது. முதலில், மத்திய இந்திய பகுதியான மத்திய பிரதேசத்திற்கு அவர் சென்றுள்ளார். அவரை மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் முறைப்படி வரவேற்றார். இதன்பின்பு, ரேவா நகரில் நடந்த தேசிய பஞ்சாயத்து ராஜ் திட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதனையொட்டி நடந்த சிறப்பு கண்காட்சியிலும் அவர் பங்கேற்றார்.
இதன்பின் ரேவா நகரில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, நாட்டில் பஞ்சாயத்து ராஜ் நடைமுறையை வலுப்படுத்த எங்களுடைய அரசு சீராக பணியாற்றி வருகிறது.
கிராமப்புற இந்தியாவில் வசிப்பவர்களின் வாழ்வை எளிமையாக்க அரசு மேற்கொண்டு வரும் எந்தவொரு திட்டம் என்றாலும், அதனை நம்முடைய பஞ்சாயத்து அமைப்புகள் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்தி வருகின்றன.
2014-ம் ஆண்டுக்கு பின் பஞ்சாயத்துகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடானது, ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், அதற்கு முன்பு ரூ.70 ஆயிரம் கோடிக்கும் குறைவாகவே நிதி ஒதுக்கீடு இருந்தது.
நீங்கள் நீண்டகாலம் நம்பியிருந்த மக்கள், உங்களது வளர்ச்சி பற்றி ஒருபோதும் தீவிர கவனம் ஏன் செலுத்தவில்லை என்று நான் எப்போதும் நினைத்து பார்ப்பேன்.
இந்திய விடுதலைக்கு பின் அதிக முறை அரசாட்சி செய்த கட்சியானது, அந்த கிராமங்களின் நம்பிக்கையை முறித்து விட்டது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் மொத்தம் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கிறார். இதன்பின்னர், இன்று மாலை கேரளாவின் கொச்சி நகருக்கு பயணிக்க இருக்கிறார்.