திவாலாகிவிட்டோம்... நாளை முதல் சேவையை நிறுத்தும் இந்திய விமான நிறுவனம்...!
இந்திய விமானப்போக்குவரத்து சந்தையில் 56 சதவிகித பங்குகளுடன் இண்டிகோ முதல் இடத்தில் உள்ளது.;
புதுடெல்லி,
இந்திய விமானப்போக்குவரத்து சந்தையில் 56 சதவிகித பங்குகளுடன் இண்டிகோ முதல் இடத்தில் உள்ளது. இண்டிகோவுக்கு அடுத்தபடியாக 8.9 சதவிகித பங்குகளுடன் ஏர் இந்தியா 2வது இடத்திலும், 8.7 சதவிகித பங்குகளுடன் விஸ்தாரா 3வது இடத்திலும் உள்ளன.
அதேவேளை, இந்திய விமானப்போக்குவரத்து சந்தையில் 6.9 சதவிகித பங்குகளுடன் கோ பஸ்ட் (Go First) விமான நிறுவனம் 5வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், தாங்கள் திவாலாகிவிட்டதாக கோ பஸ்ட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், திவால் அறிவிப்பை கோ பஸ்ட் நிறுவனம் தேசிய நிறுவன சட்ட தீர்பாயத்திடம் அறிக்கையாக தெரிவித்துள்ளது.
திவால் ஆகிவிட்டதாக அறிவித்துள்ள கோ பஸ்ட் விமான நிறுவனம் பயணிகள் விமான சேவையை நாளை முதல் 3 நாட்களுக்கு நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை முதல் 5ம் தேதி வரையிலான அனைத்து விமான சேவையும் நிறுத்தப்படுவதாக கோ பஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
பி அண்ட் டபுள்யூ இண்டர்னேஷனல் ஏரோ எஞ்சின் என்ற அமெரிக்க நிறுவனம் கோ பஸ்ட் நிறுவனத்திற்கு விமான எஞ்சின் வழங்கி வந்தது. சமீப காலமாக அந்த நிறுவனம் வழங்கிய எஞ்சின்கள் அதிக பழுதடைந்ததாலும் அதற்கான செலவுகளுக்கான கையிருப்பு பணம் இல்லாததாலும் விமான சேவையை தொடர முடியவில்லை என்று கோ பஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பங்குதாரர்களின் நலனை பாதுகாக்கவே திவால் நோட்டீஸ் வழங்கியதாக கோ பஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கோ பஸ்ட் நிறுவனத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு விமான சேவை தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய விமானப்போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.