சித்தராமையா ஆட்சியில் ரூ.35 ஆயிரம் கோடி ஊழல் நடந்தது; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி

சித்தராமையா ஆட்சியில் ரூ.35 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

Update: 2023-01-23 21:20 GMT

பெங்களூரு:

சித்தராமையா ஆட்சியில் ரூ.35 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ரத்தத்தில் கலந்துள்ளது

நாட்டை 60 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ், எல்லாவற்றிலும் ஊழல் செய்துள்ளது. ஊழல் காங்கிரசாரின் ரத்தத்தில் கலந்துள்ளது. தங்களை போலவே பா.ஜனதாவினரும் ஊழல் செய்வார்கள் என்று காங்கிரசார் கருதி எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். ஊழலை ஒழிப்பதாக கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸ் கூறியது. ஆனால் 5 ஆண்டுகள் ஆட்சி செய்த அக்கட்சியினர், ஊழல்களை செய்தனர். ஊழலுக்கு எதிரான லோக்அயுக்தா அமைப்பை முடக்கினர். ஊழல்களை பாதுகாக்க ஊழல் தடுப்பு படையை ஆரம்பித்தனர்.

நாங்கள் ஊழல்களை செய்திருந்தால், லோக்அயுக்தா அமைப்புக்கு அதிகாரம் வழங்கி இருக்க மாட்டோம். ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுகிறார். அதன் அடிப்படையில் நாங்கள் ஊழலை ஒழிக்க பாடுபட்டு வருகிறோம். சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது (2013-18) ரூ.35 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திரா உணவகம்

பெங்களூருவில் 900 ஏக்கர் நிலத்தை அரசின் அரசாணையில் இருந்து விடுவித்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் 50 சதவீத கமிஷன் வாங்கியுள்ளனர். ஆனால் எங்கள் அரசு மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை காங்கிரசார் கூறுகிறார்கள். ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்குவதாக கூறி இந்திரா உணவகங்களை தொடங்கினர். ஆனால் அதிலும் ஊழல் செய்துள்ளனர். குப்பை கழிவுகளை நிர்வகிப்பதில் ரூ.1,000 கோடி ஊழல் செய்துள்ளனர். இந்த ஊழல்கள் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்