விவசாயிக்கு கடன் கொடுக்க லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளருக்கு 2 ஆண்டு சிறை
விவசாயிக்கு கடன் கொடுக்க லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பெங்களூரு:
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளியை சேர்ந்தவர் ரவி, விவசாயி. இவர், வங்கி ஒன்றில் விவசாயத்திற்காக ரூ.1 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அந்த வங்கியில் மேலாளராக இருந்த ஸ்ரீதர், ரூ.1 லட்சம் கடன் வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் கொடுக்கும்படி கேட்டு இருந்தார். இதுபற்றி கடந்த 2012-ம் ஆண்டு லோக் அயுக்தா போலீசில், விவசாயி ரவி புகார் அளித்திருந்தார். பின்னர் ரவியிடம் இருந்து ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது வங்கி மேலாளரான ஸ்ரீதரை லோக் அயுக்தா போலீசார் கைது செய்திருந்தார்கள்.லோக் அயுக்தாவில் பதிவான இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு இருந்தது. அதாவது ஸ்ரீதர் வங்கி மேலாளர் என்பதால், சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு இருந்தது. அதன்படி, இந்த வழக்கு தொடர்பான விசாரணை பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது ரவியிடம் ரூ.7 ஆயிரத்தை ஸ்ரீதர் லஞ்சமாக பெற்றது ஆதாரத்துடன் நிரூபணமாகி இருப்பதால், அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.