மக்களவையில் அமளிக்கிடையே 3 மசோதாக்கள் நிறைவேற்றம் இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

மக்களவையில், அமளிக்கிடையே 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2023-07-28 21:45 GMT

புதுடெல்லி, 

நாடாளுமன்ற மக்களவை நேற்று தொடங்கியவுடன், எதிர்க்கட்சி எம்.பி.க்கள், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை உடனே தொடங்குமாறு கூச்சலிட்டனர்.

அதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா, ''கேள்வி நேரம் முக்கியமானது. அதை நடத்த விடுங்கள்'' என்று கேட்டுக் கொண்டார்.

மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ''கடந்த 1978-ம் ஆண்டு மே 10-ந் தேதி, நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்தவுடனே விவாதம் தொடங்கியது'' என்று சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி குறுக்கிட்டு, ''எல்லாம் விதிமுறைபடி நடக்கிறது. 10 நாட்களுக்குள் விவாதம் நடத்தப்படும். எங்களிடம் போதிய எம்.பி.க்கள் உள்ளனர். உங்களிடம் போதிய எம்.பி.க்கள் இருந்தால், மசோதாக்களை தோற்கடித்து காட்டுங்கள்'' என்று சவால் விடுத்தார்.

அமளி தொடர்ந்ததால், சபை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

பகல் 12 மணிக்கு சபை கூடியபோது, ராஜேந்திர அகர்வால், சபாநாயகர் இருக்கையில் இருந்தார். அவர், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்த மசோதாவை பரிசீலனைக்கு எடுத்தார். அமளிக்கிடையே அம்மசோதா நிறைவேற்றப்பட்டது.

பின்னர், தேசிய நர்சிங் மற்றும் பேறுகால பராமரிப்பு ஆணைய மசோதா, தேசிய பல்சார்ந்த ஆணைய மசோதா ஆகியவையும் அமளிக்கிடையே அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்டன.

மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா, அடுத்த வாரம் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் கூறினார்.

டெல்லி அரசின் குரூப்-4 அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்துக்கு மாற்றாக மசோதா கொண்டுவர மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. அந்த மசோதாவும் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்று அர்ஜுன்ராம் மேக்வால் கூறினார்.

அந்த அவசர சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர ஆ.ராசா (தி.மு.க.) உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அந்த நோட்டீஸ்களும், அடுத்த வாரம் எடுத்துக் கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். பின்னர், சபை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை நேற்று கூடியவுடன், 2 உறுப்பினர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பா.ஜனதா எம்.பி. வினய் தினுர் தெண்டுல்கருக்கு பிரிவுபசார வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

பின்னர், 267-வது விதியின்கீழ், சபை அலுவல்களை ஒத்திவைத்து விட்டு, மணிப்பூர் சம்பவத்தை விவாதிக்கக்கோரி, பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த 47 எம்.பி.க்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளதாக அவர்களது பெயர்களை சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர் வாசித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

இதுபோன்ற நோட்டீஸ்களை, கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து ஏராளமான எம்.பி.க்கள் அளித்துள்ளனர். நான் ஏற்கனவே 176-வது விதியின்கீழ், குறுகிய கால விவாதம் நடத்த சம்மதம் தெரிவித்துள்ளேன். உறுப்பினர்கள், கட்சி கண்ணோட்டத்துக்கு அப்பால் செயல்பட்டு, அந்த விதியின்கீழ் விவாதம் நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் எழுந்து, ''அது எங்களுக்கு தெரியும். நாங்கள் குறிப்பிட்ட விதியின்கீழ் விவாதம் நடத்த முன்வாருங்கள்'' என்று கூறினார்.

அதற்கு ஜெகதீப் தன்கர், ''உங்களுக்கு தெரியும் என்று எனக்கு தெரியும் சார். நீங்கள் சொல்ல வேண்டாம். நான் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.'' என்று கூறினார். ஆனால், டெரிக் ஓ பிரையன் கேட்கவில்லை.

கோபம் அடைந்த ஜெகதீப் தன்கர், ''டெரிக் ஓ பிரையன், இப்படி நாடகத்தில் ஈடுபடுவது உங்கள் வழக்கமாகி விட்டது. ஒவ்வொரு தடவை நீங்கள் எழும்போதும், இது உங்கள் சிறப்புரிமை என்று நினைக்கிறீர்கள். குறைந்தபட்சம், சபைத்தலைவருக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும்'' என்று கூறினார்.

'நாடகம்' என்று கூறியதற்கு டெரிக் ஓ பிரையன் ஆட்சேபனை தெரிவித்தார். 267-வது விதியின்கீழ் விவாதம் நடத்த மட்டுமே கோருவதாக அவர் மேஜையை தட்டினார்.

மேலும் கோபம் அடைந்த ஜெகதீப் தன்கர், ''மேஜையை தட்டாதீர்கள். இதை சகித்துக் கொள்ள முடியாது. மன்னியுங்கள்'' என்று கூறினார். டெரிக் ஓ பிரையன் தொடர்ந்து வலியுறுத்த, ஜெகதீப் தன்கர், சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். இதனால், நேற்று மாநிலங்களவை வெறும் 27 நிமிடங்கள் மட்டுமே நடந்தது.

இன்றும், நாளையும் சபை கூடாது. இதன் காரணமாக இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்