அசோக் கெலாட், சச்சின் பைலட் மோதல்: இருவரும் காங்கிரசின் சொத்துக்கள் - ராகுல் காந்தி

அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவரும் காங்கிரசின் சொத்துக்கள் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Update: 2022-11-28 10:48 GMT

இந்தூர்,

ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதல் முற்றி உள்ளது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் கட்சியின் சொத்துக்கள் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இந்தூர் அருகே செய்தியாளர்கள் சந்திப்பில், ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இருவருக்கும் இடையிலான மோதல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, யாத்திரையை இது பாதிக்காது, இரு தலைவர்களும் காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் என்று கூறினார்.

வாய்ப்பு கிடைத்தால் அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு, தற்போது எனது கவனம் முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரையில் இருப்பதால் ஊடகங்களுக்கு எந்த தலைப்புச் செய்தியையும் கொடுக்க விரும்பவில்லை. இந்த கேள்விக்கான பதில் ஒரு ஆண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் என்று கூறினார்.

மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி 2019 மக்களவைத் தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தியை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்துக்குத் தீர்வு காண்பதற்கான திட்டங்கள் குறித்த கேள்விக்கு ராகுல் காந்தி, தேசத்தின் மொத்தச் செல்வமும் மூன்று-நான்கு தொழிலதிபர்களின் கைகளில் அடைபட்டிருப்பதுதான் தற்போதைய முக்கியப் பிரச்சினை. நாட்டில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க சிறு தொழில்களை உருவாக்குவதில் காங்கிரஸ் கவனம் செலுத்தும் என்று கூறினார்.

மேலும், மக்கள் தொடர்பு முயற்சியான பாரத் ஜோடோ யாத்திரை, தேசத்தின் குரலை உயர்த்துவதாகவும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்