சிக்பேட்டை
பெங்களூரு கலாசிபாளையம் கே.ஆர்.மார்க்கெட்டில் இருந்து பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்திற்கு (பி.எம்.டி.சி.) சொந்தமான பஸ் நேற்று காலை புறப்பட்டு சாம்ராஜ்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் மைசூரு ரோட்டில் உள்ள ஸ்ரீபாலகங்காதரர் சுவாமிஜி மேம்பாலத்தில் சென்றது. அந்த சமயத்தில் டிரைவர் திடீரென்று பஸ்சை பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். ஆனால் பிரேக் பழுதானதால் அவரது கட்டுப்பாட்டை இழந்த பஸ் மேம்பாலத்தின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி அதில் இருந்த அறிவிப்பு பலகையை இடித்து தள்ளியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பஸ்சில் டிரைவர், கண்டக்டர் மட்டுமே இருந்துள்ளனர். பயணிகள் யாரும் இல்லை. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சிக்பேட்டை போலீசார் விரைந்து வந்து, விபத்தில் சிக்கிய பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதைத்தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.