ஜனநாயகத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்: அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம்

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதற்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-22 11:14 GMT

கொல்கத்தா,

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் தற்போது ஆஜர்படுத்தியுள்ளனர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கெஜ்ரிவால் மீதான இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதற்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-மந்திரியான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எனது அசைக்க முடியாத ஆதரவையும் ஒற்றுமையையும் தெரிவிக்கும் நோக்கில், சுனிதா கெஜ்ரிவாலிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன்.

எதிர்க்கட்சி முதல்-மந்திரிகளை வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். அதேநேரத்தில், சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரணையின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தண்டனையின்றி தங்கள் முறைகேடுகளைத் தொடர அனுமதிக்கப்படுவது மூர்க்கத்தனமானது. குறிப்பாக அவர்கள் பா.ஜ.க.வில் இணைந்த பிறகு தண்டிக்கப்படுவதில்லை. அதோடு, முறைகேடுகளைத் தொடரவும் அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஜனநாயகத்தின் மீதான மூர்க்கத்தனமான, அப்பட்டமான தாக்குதல் இது.

நமது இந்தியா கூட்டணி இன்று தேர்தல் ஆணையத்தை சந்தித்து தனது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், வேண்டுமென்றே எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுவது குறித்து முறையிடும். தேர்தல் ஆணையத்துடனான இந்த முக்கிய சந்திப்பில் பங்கேற்க, திரிணாமூல் காங்கிரஸ் தரப்பில் டெரெக் ஓ பிரையன், முகம்மது நடிமுல் ஹாக் ஆகியோரை நியமித்துள்ளேன்"

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்