'பெண்களை காப்போம்' என்று பாஜக கூறுவது வெற்று கோஷம் - ராகுல் காந்தி தாக்கு
பாலியல் புகாரில் சிக்கியுள்ள மல்யுத்த சம்மேளன தலைவரை கைது செய்யக்கோரி வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுடெல்லி,
இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மனரீதியாக துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டிய இந்திய முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுட்டனர். பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர்.
கடந்த மாதம் 23ம் தேதி முதல் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கும், டெல்லி போலீசாருக்கும் இடையே இன்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, போலீஸ் சீருடையில் வந்த சிலர் மல்யுத்த வீரர்களை தாக்கியதாக குற்றச்சாட்டி எழுந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"நம் நாட்டு வீரர்களிடம் இதுபோன்ற நடந்து கொள்வது மிகவும் வெட்கக்கேடானது. 'பெண்களை காப்போம்' என்று பாஜக கூறுவது பொய்யான கோஷம்! உண்மையில், இந்தியாவின் மகள்களை சித்ரவதை செய்வதற்கு பாஜக ஒருபோதும் வெட்கப்படுவது இல்லை" என்று ராகுல் காந்தி தனது கண்டனக் குரலை பதிவு செய்துள்ளார்.