மத்திய மந்திரியின் கார் கதவை டிரைவர் திடீரென திறந்ததால் விபத்தில் சிக்கி பா.ஜனதா தொண்டர் பலி

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

Update: 2024-04-09 03:51 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் மத்திய மந்திரி ஷோபாவின் கார் கதவை டிரைவர் திடீரென திறந்ததால், தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற பா.ஜனதா தொண்டர் விபத்தில் சிக்கி பலியானார்.

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 26-ந் தேதி மற்றும் மே 7-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. பெங்களூரு வடக்கு உள்பட 14 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. இதில் பெங்களூரு வடக்கு தொகுதியில் பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி ஷோபா களம் காண்கிறார். அவர் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் மத்திய மந்திரி ஷோபா, நேற்று காலையில் வழக்கம்போல் தனது காரில் தேர்தல் பிரசாரத்திற்கு புறப்பட்டு சென்றார். அவரது கார் கே.ஆர்.புரம் பகுதியில் உள்ள தேவசந்திரா விநாயகர் கோவில் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஷோபாவின் காரை டிரைவர் சாலையின் ஓரத்தில் நிறுத்தினார்.

மேலும் டிரைவர் தன்பக்கம் இருந்த கார் கதவை திடீரென்று அவசரமாக திறந்தார். அப்போது மத்திய மந்திரி காருக்கு பின்னால் ஸ்கூட்டரில் ஒருவர் வந்தார். அவர் கதவு திறந்தது பற்றி அறியாமல் வேகமாக வந்துள்ளார். அப்போது அவர் மத்திய மந்திரி காரின் கதவு மீது மோதினார். இதில் ஸ்கூட்டரில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டு நடுரோட்டில் விழுந்தார்.

அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ்சின் சக்கரம் சாலையில் விழுந்து கிடந்தவர் மீது ஏறி இறங்கியது. இதில்அவர் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து கே.ஆர்.புரம் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரிக்கும், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பலியானவர் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 55) என்ற தொழிலாளி என்பது தெரிந்தது.

பா.ஜனதா தொண்டரான அவர் பிரசாரத்தில் பங்கேற்க சென்றபோது மத்திய மந்திரியின் கார் கதவை டிரைவர் திடீரென திறந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் சிக்கி பலியான பிரகாசின் சகோதரி சாந்தா கூறுகையில், தனது சகோதரர் பா.ஜனதா கட்சியின் தீவிர தொண்டர் ஆவார். அவர் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அவருக்கு எந்த உடல் நலம் பாதிப்பும் கிடையாது. மத்திய மந்திரியின் கார் கதவை டிரைவர் திடீரென திறந்ததால் ஏற்பட்ட விபத்தில் எனது சகோதரர் இறந்துவிட்டாரே என்று கண்ணீர்விட்டு கதறி அழுதார். இது காண்போரின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. மத்திய மந்திரி ஷோபாவின் கார் கதவை டிரைவர் திடீரென திறந்ததால் பா.ஜனதா தொண்டர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்